உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை

சியோல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தென்கொரியாவில் அளித்த பேட்டியில், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக கூறினார். அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு பண உதவி செய்கிறது என்ற காரணங்களை கூறி இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 50 சதவீத வரி விதித்தார். இதனால் ஜவுளி, நகை, இயந்திரங்கள், மருந்து துறை ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. இது தொடர்பாக இந்தியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையே பேச்சு நடந்து வந்தது. நம் நாட்டின் வேளாண் மற்றும் பால் சந்தையை அமெரிக்க தயாரிப்புகளுக்கு திறக்க அந்நாடு கோரியது. இதற்கு மத்திய அரசு மறுத்ததால் பேச்சு நின்றது. 'இந்திய சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க முடியாது' என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இதனால் அமெரிக்கா நம் நாட்டுக்கான வரியை 50 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக ஆக குறைக்க ஒப்புக்கொண்டது என கூறப்படுகிறது. ஆனால் இரு தரப்பும் பரஸ்பர ஒப்பந்தம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் ஆசிய பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக நேற்று தென் கொரியாவுக்கு சென்றார். அங்கு ஆசியா - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் நீண்ட உரை நிகழ்த்தினார். அதில், “நான் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் மதிக்கிறேன்; சிக்கிறேன். எங்கள் இடையே சிறந்த உறவு உள்ளது. அவர் பார்ப்பதற்கு மென்மையானவர். ஆனால் மிகவும் கடினமான, வலுவான தலைவர்,” என்றார். ஜவுளி பங்குகள் விலை உயர்வு! நம் நாட்டின் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பால் ஜவுளி, இறால் தொடர்புடைய ஏற்றுமதி நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்தன. இந்நிலையில், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். இதனால் இறக்குமதி வரி வெகுவாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியால் நேற்று ஜவுளி மற்றும் இறால் ஏற்றுமதி நிறுவனங்களின் பங்குகள் விலை 2 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
அக் 30, 2025 09:27

இந்தியா மீது அதிக வரியையும் விதித்துவிட்டு, இப்பொழுது வர்த்தக ஒப்பந்தம் செய்யவும் நினைக்கிறார் இந்த ட்ரம்ப். என்னா தைரியம்?


anonymous
அக் 30, 2025 09:24

CIA விடம் ஒப்பந்தம் போட்டவுடன் மீதி ஒப்பந்தங்கள் பரிசீலனைக்கு கொண்டுவரலாம்.


புதிய வீடியோ