உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உங்கள் பொருளாதாரத்தை நசுக்குவோம் இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா மிரட்டல்

உங்கள் பொருளாதாரத்தை நசுக்குவோம் இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா மிரட்டல்

வாஷிங்டன்:ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தாவிட்டால், இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதாரத்தை வரி விதித்து நசுக்குவோம் என, அமெரிக்க குடியரசு கட்சி எம்.பி., லிண்ட்சே கிரஹாம் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்யா- - உக்ரைன் இடையே 2022-ல் துவங்கிய போர் இன்று வரை நீடிக்கிறது. இதனால் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தப் போரை நிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பல முறை தொலைபேசி வாயிலாக பேச்சு நடத்தினார். அதில் பிடி கொடுக்காமல் நழுவி விட்டார் புடின். இதனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்துவதற்காக, அந்நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. ரஷ்யாவிடம் ஏராளமான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் உள்ளன. இதில் பெரும்பகுதி தற்போது இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் வாயிலாக வரும் வருவாயை வைத்து, ரஷ்யா தொடர்ந்து போரில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால், 'ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் அதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால், 100 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள நேரிடும்' என கடந்த வாரம் அதிபர் டிரம்ப் மற்றும் நேட்டோ அமைப்பின் பொதுச் செயலர் மார்க் ருட்டே எச்சரித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் ஆளும் குடியரசு கட்சியின் மூத்த எம்.பி., லிண்ட்சே கிரஹாம், ரஷ்யாவுடன் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் வர்த்தக உறவை நிறுத்தவில்லை எனில், அந்நாடுகளின் பொருளாதாரத்தை அழிப்போம், என, 'டிவி சேனல்' ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது: ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளின் மீது அதிபர் டிரம்ப் வரி விதிக்கப் போகிறார். ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 80 சதவீதத்தை சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகள் வாங்குகின்றன. இது புடினின் ராணுவத்தை இயங்க வைக்கிறது. எனவே, புடினுக்கு உதவுவதற்காக இந்த நாடுகளின் மீது டிரம்ப் 100 சதவீத வரி விதிக்கப் போகிறார். இந்த மூன்று நாடுகளுக்கும் நான் கூறுவது இதுதான்; நீங்கள் இந்தப் போரைத் தொடர அனுமதிக்கும் வகையில், மலிவாக கிடைக்கும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை வாங்கினால், நாங்கள் உங்கள் பொருளாதாரத்தை நசுக்குவோம். இந்த வர்த்தகத்தில் ரத்த கரை படிந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
ஜூலை 23, 2025 11:05

இவர் வர வர வடிவேலு காமெடி செய்கிறார். இந்தியாவிலிருத்து வரும் பொருட்களுக்கு மக வரி விதித்தால் கஷ்டப்படுப் போவது அமெரிக்க மக்கள் தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை