உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச இடைக்கால நிர்வாகத்தில் வன்முறை கும்பல்கள் அட்டூழியம் * ஓராண்டில் 637 பேர் அடித்துக் கொலை

வங்கதேச இடைக்கால நிர்வாகத்தில் வன்முறை கும்பல்கள் அட்டூழியம் * ஓராண்டில் 637 பேர் அடித்துக் கொலை

டாக்கா:வங்கதேசத்தில் இடைக்கால நிர்வாகம், ஓராண்டை நிறைந்துள்ளது. இந்த காலத்தில் வன்முறை கும்பல்கள் அட்டூழியம் மேலோங்கியிருந்தது. கடந்த 12 மாதங்களில், 637 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு ஜூலை மாதம் நடந்த மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்தது. போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்த, கடந்தாண்டு ஆகஸ்டில், பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அவர் வங்கதேசத்தில் இருந்து தப்பி நம் நாட்டில் வந்து தஞ்சமடைந்தார். அதன் பின் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் இடைக்கால அரசில் இடம் பெற்றுள்ளனர். அதன் தலைமை ஆலோசகராக யூனுஸ் உள்ளார். இந்த இடைக்கால நிர்வாகம் அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டில், ஆட்சி, அதிகாரம் என்ற போர்வையில், பல்வேறு கும்பல்கள், வன்முறைகளில் ஈடுபட்டன. குறிப்பாக, 637 பேர் இந்த கும்பல்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். அதில், 183 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இது குறித்து, வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த ஜனநாயக நிர்வாகத்திற்கான உலகளாவிய மையம் புள்ளிவிபரத்துடன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: வங்கதேசத்தில், கடந்தாண்டு ஆகஸ்டுக்கு பின் கும்பல் வன்முறை சம்பவங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதை கட்டுப்படுத்த வேண்டிய போலீசோ, நீதித்துறையோ அங்கு செயல்படுவது போன்றே தெரியவில்லை. இவர்கள் முந்தைய ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சியின் எச்சங்களை மாற்றுவதிலேயே முனைப்புடன் ஈடுபட்டு உள்ளனர். அனைத்து கும்பல் வன்முறைக்கும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்திகளே காரணம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்த ஆண்டு ஜூலை வரை, இந்த வன்முறை கும்பல்களால், 637 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 70 சதவீதம் பேர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர். இந்த கும்பல் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து நீதியின் முன் நிறுத்தும் நடவடிக்கையை போலீசார் எடுக்கவில்லை. சில வழக்குகளில் மட்டுமே கைதுகள் நடந்துள்ளன. வங்கதேசத்தில் நீதித்துறை இல்லாத நிலையே தற்போது நிலவுகிறது. அவாமி லீக் கட்சியினருக்கு அடுத்தபடியாக கும்பல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மத சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மற்றும் அகமதியா முஸ்லிம்கள். கடந்த, 2023ல் நாடு முழுதும், 51 அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்தன. அதனுடன் ஒப்பிடுகையில், 2024ல், இதுபோன்ற சம்பவங்கள் 12 மடங்கு உயர்ந்துள்ளது. காவல் துறை மறுசீரமைப்பு, நீதித்துறை சுதந்திரம், சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை கட்டுப்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய அவசர சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் கும்பல் வன்முறை வங்கதேசத்தின் நிரந்தர அம்சமாகும். அவர்கள் தான் யார் வாழ்வது, யார் சாவது என்பதை முடிவு செய்வார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை