| ADDED : நவ 04, 2024 10:28 AM
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், லெவோடோபி லக்கி மலையில், இன்று (நவ.,04) எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் இலே புரா மாவட்டத்தில் துலிபாலி கிராமம், நோபோ, நுரபெலன் மற்றும் ரியாங் ரீட்டா ஆகிய 4 கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த விபத்தில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், பலர் பலத்த காயமுற்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த சில வாரங்களில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட இரண்டாவது எரிமலை வெடிப்பு இதுவாகும். மேற்கு சுமத்ரா மாகாணத்தின் மவுண்ட் மராபி பகுதியில், அக்.,27ம் தேதி எரிமலை வெடித்தது. இதனால், அருகிலுள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால் எந்த உயிரிழப்பும் அதிர்ஷ்டவசமாக ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.