அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்பின் ஆசி பெற்றவர் யார்?
வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் பதவிக்கு, 2028ல் நடக்கும் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் பெரும்பாலும், துணை அதிபராக உள்ள ஜே.டி.வான்ஸ் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என, அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அரசியலமைப்பின் 22வது சட்டத்திருத்தின்படி ஒருவர் இரு முறை மட்டுமே அதிபர் பதவியில் இருக்க முடியும். ஒருவரின் மறைவால் அல்லது பதவி விலகலால் குறுகிய காலம் அதிபராக இருந்தாலும், அவரால் மேலும் ஒரு முறை மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். அந்த வகையில் அதிபர் டிரம்ப் கடந்த ஜனவரியில் இரண்டாவது முறை அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் தனியார் செய்தி சேனல் டிரம்பிடம் நேர்காணல் நடத்தியது. அப்போது, அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட விருப்பம் உள்ளது; ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. அதனால் குடியரசு கட்சியின் வேட்பாளராக, வான்ஸ் நிறுத்தப்படலாம். அவர் துணை அதிபராக இருப்பதால், அது நியாயமாகவும் இருக்கும். அவர் சிறப்பாக செயல்படுகிறார். இருப்பினும் அதை முடிவு செய்ய இன்னும் நேரம் உள்ளது,” என்றார்.