புத்த துறவிகளுடன் நெருங்கி பழகி ரூ.100 கோடி பறித்த பெண் கைது
பாங்காக்:தாய்லாந்தில் புத்த துறவிகளுடன் நெருங்கி பழகி, அதை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டி, கடந்த மூன்று ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் பறித்த மோசடி பெண்ணை போலீசார் கைது செய்தனர்.தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் பிரபல புத்தர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தலைமை துறவி சமீபத்தில் திடீரென தன் துறவு வாழ்க்கையை கைவிட்டார்.இது சர்ச்சையான நிலையில், போலீசார் இது குறித்து விசாரித்தனர். அதில் துறவியுடன் நெருங்கி பழகிய பெண் ஒருவர், தான் கர்ப்பமடைந்ததாகக் கூறி, 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது. அந்தரங்க படங்கள்
இதையடுத்து, துறவியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற நோன்தாபுரி மாகாணத்தைச் சேர்ந்த விலாவன் எம்சாவாட், 35, என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரது மொபைல் போன், வங்கி கணக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்த போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.அவரது மொபைல் போனில் ஏராளமான துறவிகளுடன் அவர் இருக்கும் ஆயிரக்கணக்கான அந்தரங்க படங்கள், வீடியோக்கள் இருந்தன.  நன்கொடை பணம்
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் அவரது வங்கி கணக்கிற்கு 100 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுஉள்ளது தெரிந்தது. அவற்றில் பெரும்பகுதியை ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு விலாவன் எம்சாவாட் இழந்துஉள்ளார்.இது குறித்து போலீசார் கூறுகையில், 'விலாவன் எம்சாவாட் உடன் நெருங்கி பழகிய துறவிகள் மிரட்ட லுக்கு ஆளான உடன் பயந்து, புத்தர் கோவில் அறக்கட்டளைக்கு நன்கொடை வந்த பணத்தை தந்து பிரச்னையை முடித்து உள்ளனர்' என, குறிப்பிட்டனர்.