அமைதியை வலுவாக ஊக்குவிக்கும் உலக தலைவர்கள் தான் இப்போது தேவை; டிரம்புக்கு மலேசிய பிரதமர் பாராட்டு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கோலாலம்பூர்: உலகிற்கு அமைதியை வலுவாக ஊக்குவிக்கும் தலைவர்கள் தேவை என்று அமெரிக்க அதிபர் டிரம்பை, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பாராட்டி உள்ளார்.மலேசியாவின் கோலாலம்பூரில் ஆசியான் உச்சி மாநாடு தொடங்கி உள்ளது. மாநாட்டில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் மலேசியா வந்துள்ளார். வாஷிங்டனில் இருந்து புறப்பட்டு கோலாலம்பூர் வந்த அவருக்கு, மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.விமான ஓடுபாதையில் நடனக்கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாட, அவருடன் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமும் நடனமாடினார். இருவரின் நடன வீடியோ இணையத்தில் வைரலானது. டிரம்புக்கு ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.பின்னர், ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்றார். அதில் கம்போடியா-தாய்லாந்து இடையே போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. மாநாட்டில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அமெரிக்க அதிபர் டிரம்பை பாராட்டினார். அவர் பேசியதாவது;அமைதியான தீர்வை வலியுறுத்த இரு பிரதமர்களுக்கும் நீங்கள் (டிரம்ப்) தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தீர்கள். இந்த உலகிற்கு வலுவான அமைதியை ஊக்குவிக்கும் தலைவர்கள் தேவை. அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கான ஆதரவு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அவசர அழைப்பை எனக்கு விடுத்தீர்கள். அதற்காக என்னிடம் நீங்கள் பேசினீர்கள். இரு நாடுகளின் (கம்போடியா-தாய்லாந்து) தலைவர்களிடமும் தனிப்பட்ட முறையில் பேசினீர்கள். உங்களுக்கு எனது நன்றி. இவ்வாறு மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பேசினார்.