உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தயாராகிறது உலகின் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக துறைமுகம்; சிங்கப்பூருக்கு 50 மடங்கு இணையானது

தயாராகிறது உலகின் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக துறைமுகம்; சிங்கப்பூருக்கு 50 மடங்கு இணையானது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனாவின் ஹைனன் தீவை உலகின் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக துறைமுகமாக மாற்றும் வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை சீனா அதிகாரப்பூர்வ மாக துவக்கியுள்ளது.நம் அண்டை நாடான சீனாவின், தென்சீன கடல்பகுதியில் அமைந்துள்ளது ஹைனன் தீவு. சீனாவின் பிரதான நிலப்பரப்பான குவாங்டாங் மாகாணத்தில் இருந்து, கியுசோவ் நீரிணை வாயிலாக இது பிரிக்கப்பட்டுள்ளது. வித்தியாசம் இது வியட்நாமுக்கு கிழக்கிலும், பிலிப்பைன்சுக்கு மேற்கிலும் அமைந்துள்ளது. மொத்தம், 35,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இத்தீவு, தைவான் பரப்பளவுக்கு இணையானது; சிங்கப்பூரைவிட 50 மடங்கு பெரியது. இத்தீவை உலகின் மிகப் பெரிய சுதந்திர வர்த்தக துறைமுகமாக மாற்றுவதற்கான திட்டத்தை சீனா அதிகாரப்பூர்வமாக துவக்கியுள்ளது. இதன்படி, முழுத் தீவும் இப்போது ஒரு தனி சுங்க மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, சீனாவின் பிற பகுதிகளில் இருக்கும் சட்ட திட்டங்களுக்கும், இங்குள்ள சட்ட திட்டங்களுக்கும் வித்தியாசம் இருக்கும். இதன்படி, வெளிநாடுகளில் இருந்து ஹைனன் தீவுக்குள் வரும் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் உட்பட, 74 சதவீத பொருட்களுக்கு எவ்வித இறக்குமதி வரியும் கிடையாது. இதற்கு முன், 21 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வரி விலக்கு காரணமாக,'ஐபோன்' மொபைல் போன் விலை மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு 8,300 ரூபாய் வரை குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது. முதலீடு மேலும், வெளி நாடுகளில் இருந்து ஒரு பொருளை ஹைனனுக்கு இறக்குமதி செய்து, அங்குள்ள தொழிற்சாலைகளில் அதற்கு, 30 சதவீதம் மதிப்பு கூட்டுதல் செய்தால், அப்பொருளை சீனாவுக்கு கொண்டு செல்லும்போது சுங்கவரி எதுவும் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, நிறுவனங்கள் ஏற்றுமதி - இறக்குமதிக்கு மட்டும் இத்தீவை மையமாக பயன்படுத்தாமல், அங்கு தொழிற்சாலைகளை நிறுவவும் சீனா ஊக்குவிக்கிறது-. இங்கு ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களுக்கான வரி விதிப்பு, 15 சதவீதம் மட்டுமே என சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் பிற பகுதிகளில் இவ்வரி, 25 சதவீதமாகும். இதேபோன்று, இங்குள்ள நிறுவனங்களில் பணிபுரியும் திறமையான பணியாளர்களுக்கான வருமான வரி விதிப்பும், 15 சதவீதம் மட்டுமே என தெரிவித்துள்ளது. இது பிற பகுதிகளில், 45 சதவீதமாக உள்ளது. இத்தீவில் புதிய சுங்க வரி திட்டம் துவங்கிய முதல் நாளிலேயே, ஐரோப்பிய நாடான ஜெர்மனியின், 'சீமென்ஸ் எனர்ஜி' நிறுவனம் ஹைனனில் தன் கிளை நிறுவனத்தை துவக்கியுள்ளது. ஹைனன் கடந்த ஐந்து ஆண்டுகளில், 1.31 லட்சம் கோடி ரூபாய்க்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது. 176 நாடுகளைச் சேர்ந்த 8,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏற்கனவே இங்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் 22 தடையற்ற வர்த்தக மண்டலங்கள் இருந்தாலும், ஹைனன் தனித்துவமாக இருக்கப் போகிறது. இதுவரை கடற்கரை மற்றும் ஓய்வு விடுதிகளுக்கு மட்டுமே உலகளவில் பெயர் பெற்றிருந்த ஹைனன், சீனச் சந்தைக்கான மிக முக்கியமான நுழைவாயில்களில் ஒன்றாக மாறும். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் சீனப் பொருட்கள் மீது வர்த்தக தடைகளை விதித்து வரும் நிலையில், உலக முதலீட்டாளர்களை ஈர்க்க சீனா எடுத்துள்ள மிகப்பெரிய ஆயுதமாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது.

தடையற்ற வர்த்தக மண்டலம்

என்றால் என்ன?

தடையற்ற வர்த்தக மண்டலம் என்பது, ஒரு நாட்டின் எல்லைக்குள் இருந்தாலும், வர்த்தகம் மற்றும் வணிகத்தை பொறுத்தவரை, அந்நாட்டின் பொதுவான சட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பகுதியாகும். வெளிநாடுகளில் இருந்து, இக்குறிப்பிட்ட வர்த்தக மண்டலத்துக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி கிடையாது. ஒருவேளை அப்பொருட்கள் இம்மண்டலத்தை தாண்டி அந்நாட்டின் பிற பகுதிகளுக்குள் கொண்டு சென்றால் மட்டுமே வரி செலுத்த வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதிகளை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டும் இம்மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன. இம்மண்டலங்களுக்குள், வெளிநாட்டு பொருட்களை வரியின்றி சேமித்து வைக்கலாம். ஒரு நாட்டில் இருந்து பொருட்களை வாங்கி, இங்கு கொண்டு வந்து, பின் வரியின்றி மற்றொரு நாட்டுக்கு அனுப்பலாம். மேலும், கச்சாப் பொருட்களை இறக்குமதி செய்து, இங்குள்ள தொழிற்சாலைகளில் அவற்றை இறுதிப் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்யலாம்.

ஹைனனின் சிறப்பம்சங்கள்

இதன் காலநிலை காரணமாக, சீனாவின் ஹவாய் என்று இது அழைக்கப்படுகிறது. இங்குள்ள கடற்கரைகளும், சொகுசு விடுதிகளும் உலகப் புகழ்பெற்றவை. மேலும், இங்கு 86 நாடுகளைச் சேர்ந்த பயணியர் விசா இன்றி பயணிக்கலாம். சீனாவின் ஒரே கடலோர விண்வெளி ஏவுதளமான 'வென்சாங்' இங்குதான் அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பெரிய குத்தூசி
டிச 24, 2025 11:36

இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகள் மலாக்கா நீரிணைப்பின் அருகே அமைந்துள்ளது, இதன் வழியேதான் உலக வர்த்தகத்தின் 95 சதவிகித கப்பல் போக்குவரத்து மற்றும் வணிகம் நடைபெறுகிறது.. இந்தியாவுக்கு சொந்தமான அந்தமான் நிகோபார் தீவு கூட்டம் என 836 தீவுகள் உள்ளது. இப்போது சீனா முன்னெடுக்கும் தென் சீனா கடல் ஹைனன் தீவு பெரும் துறைமுக திட்டம் போன்று பிரதமர் மோடி அவர்கள் 30 அந்தமான் நிகோபார் தீவுகளை இணைத்து மலாக்கா நீரிணைப்பின் முகத்துவாரத்தில் உலகின் முதன்மையான சுமார் ருபாய் 15 லட்சம் கோடி செலவில் பெரிய அளவில் கட்டமைக்க கடந்த 2016 ல் மோடி அரசு திட்டமிட்டது. ஆனால் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதிய மற்றும் அணு குண்டு கட்டுபாட்டு மையம் அந்தமானில் உள்ள பிராந்திய ராணுவ கட்டுப்பாடுடன் ஒருங்கிணைத்து உள்ளதால் தேசிய பாதுகப்பு கருதி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மலாக்கா நீரிணைப்பில் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகலில் இந்திய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் மறுசீரமைக்கப்பட்டு விரைவில் இந்த துறைமுகம் கட்டுமானம் ஆரம்பிக்கப்படும். 2035 காலத்தில் இதன் கட்டுமானம் முடியும்போது உலக கப்பல் போக்குவரத்து பொருளாதாரம் இந்திய வசம் வரும் என்பதில் சந்தேகம் இல்லை. சீனா வுக்கும் மற்ற பணக்கார நாடுகளுக்கும் இந்திய பிரதமர் மோடி சளைத்தவர் அல்ல என்பதை நாடு மக்கள் உணரவேண்டும்.


தஞ்சை மன்னர்
டிச 24, 2025 10:38

நாங்கூட எதோ நம்ம 52 இஞ்சி தான் மக்களுக்காக நல்லது செஞ்சி வைத்து இருக்குமோ என்று ................


Baskaran
டிச 24, 2025 12:05

நானும் அதே மனநிலையில் படிக்க ஆரம்பித்தேன்... இது போன்ற தொலைநோக்குப்பார்வை இல்லையோ இந்திய அரசியல் வாதிகளிடம்...


Thravisham
டிச 24, 2025 07:08

த்ரவிஷ ஊழல்மிகு முதல் குடும்பத்தின் அடுத்த முதலீடு பயணம் அனேகமாக இங்குதான் இருக்கும் போல.


KALIDASAN
டிச 24, 2025 06:46

சீனா, ஹைனன் தீவை உலகின் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக துறைமுகமாக மாற்றும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருப்பது, வெறும் பொருளாதார சீர்திருத்தமாக மட்டும் பார்க்க முடியாத ஒன்று. இது, உலக அரசியல் - வர்த்தக சூழலில் சீனா எடுத்து வரும் ஆழமான, நீண்டகால மூலோபாய நகர்வாகவே பார்க்கப்பட வேண்டும். ஒருபுறம், இறக்குமதி வரி விலக்கு, குறைந்த நிறுவன வரி, குறைந்த வருமான வரி போன்ற சலுகைகள், உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 74 சதவீத பொருட்களுக்கு வரி இல்லாத நிலை, சீனாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் ஹைனனை மிகப்பெரிய போட்டித் திறன் கொண்ட மையமாக மாற்றுகிறது. 'ஐபோன்' போன்ற பொருட்களின் விலை குறையும் என்பதே, சாதாரண நுகர்வோருக்கும் இத்திட்டத்தின் தாக்கம் எவ்வளவு பெரியது என்பதை வெளிப்படுத்துகிறது. ஆனால், இத்திட்டத்தின் உள் நோக்கம் அதைவிட முக்கியமானது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் சீனாவுக்கு எதிராக வர்த்தக தடைகளை அதிகரித்து வரும் நிலையில், அவற்றை சுற்றி வளைத்து செல்லும் “புதிய நுழைவாயில்” ஆக ஹைனன் உருவாக்கப்படுவதாகவே தெரிகிறது. வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து, இங்கே மதிப்பு கூட்டி, பின்னர் சீன பிரதான நிலப்பரப்புக்குள் வரியின்றி கொண்டு செல்லும் நடைமுறை, சீனாவுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், முழுத் தீவையே தனி சுங்க மண்டலமாக அறிவித்திருப்பது, “ஒரே நாடு - இரண்டு பொருளாதார விதிமுறைகள்” என்ற நிலையை உருவாக்குகிறது. இது முதலீட்டாளர்களுக்கு வசதியாக இருந்தாலும், சீனாவின் உள்ளக பகுதிகளில் செயல்படும் நிறுவனங்களுக்கு அநீதியாக மாறும் அபாயமும் உள்ளது. ஹைனன் - பிற மாகாணங்கள் இடையிலான வளர்ச்சி இடைவெளி மேலும் அதிகரிக்கக் கூடும். ஜெர்மனியின் 'சீமென்ஸ் எனர்ஜி' போன்ற நிறுவனங்கள் தொடக்க நாளிலேயே கிளை தொடங்கியிருப்பது, திட்டத்தின் நம்பகத்தன்மையை காட்டினாலும், நீண்ட காலத்தில் இது உலக அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதா என்பதே முக்கிய கேள்வி. மேற்கத்திய நாடுகள், ஹைனனை ஒரு “வரி தவிர்ப்பு மையம்” அல்லது “மறைமுக வர்த்தக வழி” எனப் பார்க்கத் தொடங்கினால், புதிய தடைகள் உருவாகும் வாய்ப்பும் உள்ளது. முடிவில், ஹைனன் திட்டம் சீனாவின் பொருளாதார துணிச்சலையும், உலக வர்த்தகத்தில் தனது இடத்தை தக்கவைக்க மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பான அணுகுமுறையையும் வெளிப்படுத்துகிறது. இது சீனாவுக்கு ஒரு வாய்ப்பு, ஆனால் அதே நேரத்தில் உலக அரசியல் - வர்த்தக சமநிலைக்கு ஒரு சவால். ஹைனன் வெறும் சுற்றுலா தீவாக இருந்து, சீனாவின் புதிய பொருளாதார கோட்டையாக மாறுமா என்பதை தீர்மானிப்பது, வருங்கால உலக அரசியல் சூழல்தான்.


Baskaran
டிச 24, 2025 12:09

உங்களின் ஆழமான சிந்தனைக்கு, வாழ்த்துக்கள்...


Kasimani Baskaran
டிச 24, 2025 04:15

சிங்கப்பூர் எதையும் உலகின் பெரியதாக நினைத்துக்கொண்டு செய்யாது. சிறப்பாக செய்யவேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள். அகலக்கால் வைக்காமல் சிறிது சிறிதாக வளர்வது நீடித்து நிற்க உதவும். தொழில் இல்லாமல் மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்குவது சீனாவின் கோட்பாடு. அது நிலைத்து நிற்க முடியுமா என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும். சீனாவின் வீட்டு வசதிக்காக கண்டமேனிக்கு வீடு கட்டும் கோட்பாடு வங்கிகளை எங்கு அனுப்பியது என்பது அனைவருக்கும் புரியும். அகலக்கால் ஆபத்தானது.


புதிய வீடியோ