கேசவபுரம் ஸ்ரீ ஜஸ்வர்ய மகா கணபதி கோவிலில் அகண்ட பாராயணம்
புதுடில்லி கேசவபுரத்தில் உள்ள ஸ்ரீ ஜஸ்வர்ய மகா கணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தி திருவிழா, கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கியது. விழா தொடங்கியதில் இருந்து தினமும் காலை, மாலை ஸ்ரீ ஜஸ்வர்ய மகா கணபதிக்கு பல்வேறு ஹோமங்கள், அபிஷேகம் சிறப்பு பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.அதைத் தொடர்ந்து, உலக நன்மை வேண்டி, ஜெ. சுவாமிநாதன் சாஸ்திரிகள் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை காலை, கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், கணபதி அதர்வசீர்ஷம் ஹோமம், லகுன்யாச ஏகாதசவார ருத்ராபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ரோகிணி, வடமேற்கு டெல்லி கலாச்சார அமைப்பு செய்திருந்தது.இதையடுத்து, உலக நன்மை வேண்டி, காலையில் தொடங்கி மாலை வரை, 27 முறை இடைவேளையின்றி ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. ஓவ்வொரு ஆவர்த்திக்கும், ஓவ்வொரு நட்சத்திரத்தின் அதி தேவதைகளுக்கும் அர்ச்சனை செய்யப்பட்டது. ரோகினியைச் சார்ந்த ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கம் அன்பர்கள் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர். ஏற்பாடுகளை ஆஸ்திக சமாஜம் செய்திருந்தது.அர்ச்சனை செய்யப்பட்டு, ஶ்ரீ கிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிறைவில் மகா தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.- நமது செய்தியாளர் எம்.வி. தியாகராஜன், புதுடில்லி.