பாலஸ்ரீ திருவாருர் டி. எஸ். ஸ்ரீராம் நினைவு அறக்கட்டளை விருது - 2024
இசைக் கலைஞர் திருவாரூர் டி. எஸ். ஸ்ரீராம் நினைவு அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ மீனாட்சி கலை மற்றும் பண்பாட்டு மையம் அமைப்புடன் இணைந்து, புது தில்லி சாலிமார் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் டாக்டர் அக்ஷயா அனந்த கிருஷ்ணனின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. சித்தேஷ் கணேஷ் வயலினும் மற்றும் விக்னேஷ் ஜெயராமன் மிருதங்கமும் வாசித்தனர். அதைத் தொடர்ந்து, அ. செளமியாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பண்டிட் ஜிக்யாஸ் மிஸ்ரா குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கினார். வளரும் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆறு வருடமாக இசைத் துறையில் சாதிக்கும் இசைக் கலைஞர்களுக்கு ஸ்ரீராம் நினைவு அறக்கட்டளை விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. இந்த வருடம், கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர் டாக்டர் அக்ஷயா அனந்த கிருஷ்ணன் (சுநாத கலாமணி) பரதநாட்டியக் கலைஞர் அ. செளமியா (நிருத்ய கலாமணி) வயலின் இசைக் கலைஞர் சித்தேஷ் கணேஷ் (யுவ காந்தர்வ வாத்ய மணி) டோல்கி இசைக் கலைஞர் என். அனந்தகிருஷ்ணன் (தாள வாத்ய நிபுண மணி) ஆகியோருக்கு 2024 வருடத்திற்கான சிறந்த இசைக் கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட வி.ஜி. பூமா, (கூடுதல் உறுப்பினர், (மனித வளம், ரயில்வே வாரியம்) கவுரவ விருந்தினராகக் கலந்து கொண்ட தில்லிக் கம்பன் கழகத் தலைவர் கே.வி.கே.பெருமாள் ஆகியோர் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டி பேசினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற இசைக் கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை டி. எஸ். ஸ்ரீராம் நினைவு அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகி எம். வீ. தியாகராஜன் நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவித்தார். கோவில் சார்பில் பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரன் இசைக் கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு பிரசாதம் வழங்கி கெளரவித்தார். முரளி மற்றும் ராஜசேகர் ஆகியோர் மேடையில் விருதுகளை வழங்கும் போது ஒருங்கிணைந்து உதவினர். நிகழ்ச்சியை பாகி பந்த் மற்றும் அதிதி நேகி தொகுத்து வழங்கினர். இசை ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்