பாவனாவின் ரங்கபிரவேசம்
குச்சிப்புடி நடனகுரு மீனு தாக்கூரின் மாணவி பாவனா கில்லின் அரங்க பிரவேசம் சமீபத்தில் திரிவேணி கலையரங்கில் நடைபெற்றது. வட இந்திய பெண் பாவனா பாரம்பரிய நடனத்தில் ஆர்வம் கொண்டு கடந்த பத்து வருடங்களாக குரு மீனு தாக்கூரிடம் கற்று அரங்கம் ஏறியுள்ளார். பாரம்பரிய குத்துவிளக்கிற்கு புஷ்ப அர்ப்பணிப்பை செய்து குருவின் ஆசியுடன் பாவனா தனது நிகழ்ச்சியை தொடங்கினார். குரு மீனுதாக்கூர் நட்டுவாங்கம், வித்வான் வினோத் கண்ணூர் வாய்ப்பாட்டு, தாளமணி வெற்றி பூபதி மிருதங்கம், செம்பை ஸ்ரீ நிவாசன் வயலின் என்று பலத்த கூட்டணியுடன் விறுவிறுப்பான நடனம் கணேஷ் துதியுடன் தொடங்கியது. வசந்தாவில் ஜதீஸ்வரம் அடுத்து கிருஷ்ண சப்தம் பாவனாவின் திறமையான பாவங்கள் குச்சிப்புடிக்கே உரிய விறுவிறுப்பான தொடர் கோர்வைகள் ரசிக்கும்படியாக இருந்தது.அடுத்துவந்த ராகமாலிகா தாளமாலிகாவில் குருவின் உழைப்பு அதற்கு சற்றும் குறையாத நடனம் என இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அரங்கை ஆண்டனர் என்று சொன்னால் அது மிகையாகாது.வெற்றி பூபதியின் வாசிப்பு நடனத்திற்கு மெருகூட்டியது. மீராபஜனில் முகபாவம் அருமை. கீர்த்தனம் அழகு. இறுதியாக தாம்பாளத்தின்மீது தரங்கம் ஆடி அவையோரை பிரமிப்பில் ஆழ்த்தினார். அன்றைய பார்வையாளர்கள் பெரும்பாலும் வட இந்தியர்கள். முதன்முறையாக இத்தகு நடன நிகழ்ச்சி பார்வையாளர்கள் அதிகம். நமது பாரம்பரிய நடனத்தை உலகில் எந்த பகுதியில் ஆடினாலும் அதன் மூலம் நமது கலாசாரம் வெளிப்படுகிறது. பாவனா கில் மென்மேலும் சிறக்க அன்றைய முக்கிய விருந்தினர்கள் வாழ்த்தி பேசினர். அசோக் லாவன் , விதூஷி தேபா தேவி, டாக்டர் கோபிஜி, அபய்சின்ஹா, விதூஷி வாணிமாதவ், மீனா வெங்கி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வளரும் கலைஞர் பாவனாவை பாராட்டினர். குரு மீனு தாக்கூர் ஆசிவழங்க பாவனா நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. - நமது செய்தியாளர் மீனா வெங்கி