உத்திர சுவாமிமலையில் பதினோராம் ஆண்டு கும்பாபிஷேக விழா
புதுதில்லி ஆர்.கே.புரம் உத்திர சுவாமிமலையில் (மலை மந்திர்) பதினோராம் ஆண்டு கும்பாபிஷேக விழா, ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சேவா சமாஜத் தலைவர் வி.பாலசுப்பிரமணியன் மற்றும் துணைத் தலைவர் பி. சுவாமிநாதன் ஆகியோரின் தலைமையின் கீழ் மிக விமரிசையாக நடைபெற்றது. காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவாசனம், கலச ஸ்தாபனம், மஹன்யாஸ பாராயணம் மற்றும் 11 ஆவர்த்தி ஏகாதச ருத்ர ஜபம் பாராயணம் நடைபெற்றன. தில்லி மற்றும் என். சி.ஆர். சுற்று வட்டார பகுதியில் இருந்து ரித்விக்குகள் பலர் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர். அதைத் தொடர்ந்து, ஸ்ரீ ருத்ர ஹோமம், வசோர்தாரா ஹோமம், பூர்ணாஹூதி நடைபெற்றது. ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுந்தரேஸ்வரர், தேவி மீனாட்சி மற்றும் தேவி துர்கா சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு, 108 சங்குகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதில் நிரப்பியிருந்த தீர்த்தங்களை கொண்டு சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், இதையடுத்து, தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமிநாத சுவாமி அருள்பாலித்தார். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்