சுப சித்தி விநாயகர் கோயிலில் ஹரி கீர்த்தன்
புதுடில்லி; மயூர்விகார் சுப சித்தி விநாயகர் கோயில் மற்றும் விஷ்வ வர்காரி சமஸ்தானம் இரண்டும் இணைந்து இரண்டு நாள் ஹரி கீர்த்தனம் (அபங் உற்சவம் ) நடைபெற்றது.மகாராஷ்டிர பூமியில் மக்கள் இசையாக பிரபலமாக இருப்பது இந்த அபங் எனப்படும் சங்கீதம். அனேகமாக விட்டல் பாண்டுரங்கன் ருக்குமாயி மீது பாடப்பட்டது இதில் பல சாது ஜனங்கள் இருந்தாலும் முக்கியமாக நாம் தேவ் துக்காராம் ஜானாபாய் ஆகியோர் புனைந்த பாடல்கள் பிரபலமானவை. இதில் கிராமிய முறையில் பாடுவதை வர்க்காரி பாணி என்கிறார்கள்.வெள்ளை நிற உடையில் தலையில் மராட்டி தொப்பி அணிந்து கையில் ஜால்ராவுடன் தலைவர் பாடுவதை வாங்கி பாடுகிறார்கள்.தலைவர் எனப்படும் முக்கிய கர்த்தா நடுநாயகமாக நின்றுகொண்டு கதை அர்த்தம் சொல்லி பாடலை துவங்குகிறார்.இந்த சங்கீதம் தமிழ்நாட்டில் பஜனைகளில் பாடுவதுண்டு. கடையநல்லூர் துக்காராம் கணபதி மகராஜ் அவரது மகன் ரகு மகராஜ் தலைமையில் பெரிய குழு மதுரா சென்றுவிட்டு தில்லியில் இரண்டு நாள் பாடி சப்தாகத்தை நிறைவு செய்தார்கள்.சின்னஞ்சிறு பாலகர்கள் ஒருசேர தாளமிட்டு ஆடிக்கொண்டே பாடியது காணவேண்டிய காட்சி.நம் பாரம்பரியம் அடுத்த தலைமுறை வரை எடுத்துச்செல்லும் இவர்களின் அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது.தலைநகரில் வர்க்காரி பாணி அபங் நிகழ்வு முதன் முறை நடைபெற்றது.இதனை ஏற்பாடு செய்த சுப சித்தி விநாயகர் கோவில் நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள்.---புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் மீனா வெங்கி .