கந்தசஷ்டியில் மதுர கானம்
கிழக்கு தில்லி மயூர்விகார் சுப சித்தி விநாயகர் ஆலயத்தில் கந்தசஷ்டி விழாவின் மூன்றாம் நாளன்று மாலை அத்திகிரி சகோதரிகள் விரஜா , வசுதா இவர்களின் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இருவரும் மருத்துவர்கள் என்பது கூடுதல் செய்தி. இவர்களுக்கு வயலினில் செளமியாவும் டோல்கியில் வெங்கட் லட்சுமியும் உடன் வாசித்து சிறப்பித்தனர். இசை மாலைக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வளரும் கலைஞர்களை வாழ்த்தி பேசினார். இந்த இசை மாலையை தலைநகர் கர்நாடக சங்கீத சபாவும் சுப சித்தி விநாயகர் ஆலயமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். வேழமுகத்தவனை அந்த மூலாதார மூர்த்தியை கஜமுகனை சரணம் சரணம் என வேண்டிப் பணிந்து அடுத்து ஆறுமுகனை அழகாக விளித்து ஒவ்வொரு செவி பற்றி சொல்லி அப்பா பன்னிரண்டு செவி உடையோனே என் குரல் கேட்க மாட்டாயா குமார குருவே !! முத்துக்குமார குருவே!! பால முத்துக்குமார் குருவே!!! என அவன் மனம் குளிர குளிர விளித்து என் மனக்குறையை தீர்த்து மனங்குளிர வைக்க வேண்டும் என பலவாறாக வேண்டிக்கொண்டு.. அடுத்து வேலனின் தந்தை -பிரிய சிவனை-சிவநாதனை போற்றி சிவ சிவ சிவாய நம ஓம் ..ஹர ஹர ஹராய நம ஓம் என துதித்துக்கொண்டு முருகா ! என உருகி உனை பணிந்தால் எனக்கருள்வாய்..திக்கு தெரியாமல் தவிக்கும் எனக்கு தேவர் முனிவர் பணியும் வேலா ! சுப்ரமணியா !என்றும் துணை வருவாய் என அழகாக அழைத்து அடுத்து நமக்கு பரிச்சயமான பாடல். பாபநாசம் சிவனின் கல்யாணி ராக உன்னை அல்லால் வேறு கதி இல்லை அம்மா என்று மயிலை கற்பகாம்பாளை மீனாட்சி காமாட்சி நீலாயதாட்சி என அழைத்து என்னை இந்த உலகம் எனும் நாடக மேடையில் அடைத்தது போதும். திரு உள்ளம் இறங்கி அருள்வாய் என வேண்டிக் கொண்டு ஸ்ரீ சக்ர ராஜ ராஜேஸ்வரியில் அவையோரை தாளமிட வைத்து கொண்டுஅம்புலி அணிந்த ஜடாதரனை "நம்பிக்கெட்டவர் எவரைய்யா என்ற பிரபலமான பாபநாசம் சிவனின் பாடலில் நம்மை ரசிக்க வைத்துக்கொண்டு.. மீண்டும் உருக உருக முருகனை அழைத்து வேல் உண்டு வினையில்லை மயிலுண்டுபயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே ..கந்தனுண்டு கவலையில்லை மனமே என் ஆறுதலாய் க.வெங்கடேசன் வரிகளை காதில் தேனாக பாய்ச்சிக் கொண்டு மீண்டும் பாபநாசம் சிவன். "ஸ்ரீ வல்லிதேவ சேனாபதே"வில் நம்மை முருகன் பாதம் பணியவைத்து, திருப்புகழ் பாடி பாரதியின் நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் பாடலில் சக்தி வணக்கம் செய்து மங்களமாய் இசை மாலையை நிறைவு செய்தனர். கலைஞர்களை கோவில் சார்பில் முனைவர் சுசீலா விஸ்வநாதனும் லட்சுமி ஜெயராமனும் கெளரவித்தனர். கோவில் செயலர் ரகுராமன் வளரும் கலைஞர்களை ஊக்குவித்து பேசினார். இசை மாலையை குருசரண் அழகாக தொகுத்து வழங்கினார். - நமது செய்தியாளர் மீனாவெங்கி