உள்ளூர் செய்திகள்

துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் பங்குனி உத்திர திருவிழா

புதுதில்லி: துவாரகாவில் அமைந்துள்ள ஸ்ரீ ராம் மந்திரில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை சுவாமி ஐயப்பன், சுப்பிரமணியருக்கு ருத்ராபிஷேகம், அதைத்தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றன. மாலையில் நடந்த நாமசங்கீர்த்தன பஜனையில், கிருஷ்ணமூர்த்தி, சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். பங்குனி உத்திரம், முருகப் பெருமானுக்குரிய விரத நாளாக குறிப்பிட்டு சொல்லுவதற்கு மிக முக்கியமான காரணம் உள்ளது. 27 நட்சத்திரங்களில் 12 வது நட்சத்திரமாக வருவது உத்திரம் நட்சத்திரம். தமிழ் ஆண்டில் 12வது மாதமாக வரும் பங்குனி மாதத்தில், 12வது நட்சத்திரமான உத்திரம் சேர்ந்து வருவதால் 12 திருக்கரங்களால் பக்தர்களை காக்கும் முருகப் பெருமானுக்குரிய தெய்வீக நாளாக இது கருதப்படுகிறது. சூரபத்மனுடன் போரிட்டு வென்ற பிறகு, முருகனிடம் இல்லாத ஒன்றை அவருக்கு பரிசாக தர விரும்பினான் இந்திரன். ஆனால் முருகனிடம் எல்லாமல் இருந்ததும். தாரம் மட்டுமே இல்லை. அதனால் தன்னுடைய மகள் தெய்வானையை முருகனுக்கு தாரமாக்கி, முருகனை குறையில்லாத தெய்வமாக மாற்றினான். முருகப் பெருமான், தெய்வானையை திருமணம் செய்து கொண்ட தினமே பங்குனி உத்திர தினமாகும். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !