தில்லி ரமண கேந்திரத்தில் பிரதோஷ பூஜை மற்றும் கார்த்திகை தீபம்
கார்த்திகை மாதத்தை ஒட்டி, தில்லி ரமண கேந்திரத்தில் டிசம்பர் 13, வெள்ளிக்கிழமை, பிரதோஷ பூஜை மற்றும் கார்த்திகை பரணி தீபம் ஏற்றுதல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. குரு வந்தனம், கணேச பூஜை மற்றும் கலச பூஜையுடன் வழிபாடு தொடங்கியது. இதையடுத்து, ஏகவார ருத்ராபிஷேகம், லகுன்யாசம், அதைத் தொடர்ந்து பன்னீர், சந்தனம், பால் உள்பட 11 வித அபிஷேக பொருட்களை கொண்டு சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் நடந்தது. ஸ்ரீ ருத்ர நமகம் மற்றும் சமகம் பாராயணத்தை தொடர்ந்து, ஸ்ரீ ருத்ரநாம த்ரிஸதி, சிவார்ச்சனை மற்றும் நந்திக்கு அஷ்டோத்திரம் செய்யப்பட்டது. ஷோடசோபசார பூஜைக்கு பிறகு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிரதோஷம் : தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டது, ஏகாதசி தினத்தன்று. மறுநாளான துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருக்கும் சிவ பெருமான், மூன்றாம் நாளான திரியோதசி திதியில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா கால வேளையில் மயக்க நிலையில் இருந்து விழித்து, சந்தியா நிருத்த தாண்டவம் ஆண்டினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் சிவ பெருமானின் ஐந்த விதமான தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை குறிப்பதாகும். சிவ பெருமான், பார்வதி தேவியுடன் ஆனந்த தாண்டம் ஆடி, உலக உயிர்கள் அனைத்திற்கும் அருள் புரிந்த காலமே பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் நாமும் சிவ பெருமானை வழிபட்டால், சிவனின் அருள் நமக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. அதேபோல், ரமண கேந்திராவிலும் மாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தீபம் ஏந்தி பக்தர்கள், கேந்திரா பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தனர். இதையடுத்து, பிரகாரத்தில் கூடியிருந்த பக்தா்களுக்கு பரணி தீபம் காட்டப்பட்டது. பின்பு கேந்திர மேல் தளத்தில் தீபங்கள் வைக்கப்பட்டது. பக்தர்கள் திரளாக இதில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வீட்டில் தீபம் ஏற்றி கொண்டாடுவது வழக்கம். இந்த கார்த்திகை மாதத்தின் முக்கியத்துவம் குறித்தும், இம்மாதத்தில் தீபம் ஏற்றுவதன் மகத்துவம் குறித்தும், மனித நல்வாழ்விற்கு வழிவகுக்கும் வகையில், விஞ்ஞான ரீதியாகவே செய்தார்கள். நமது கலாச்சாரத்தில் 'விளக்கு' என்பது மிக முக்கியமானதாக வணங்கப்பட்டு வந்திருக்கிறது. இது ஏதோ விளக்கை ஏற்றி, சற்று நேரம் எவ்வாறோ ஒளிரட்டும் என்பது போலல்ல. விளக்கை எப்படி ஏற்ற வேண்டும், அதன் தீபம் எப்படி இருக்க வேண்டும் என்பதும் கூட சொல்லப் பட்டிருக்கிறது. இந்த விளக்கை ஏற்றும் போது, அதற்கு விளக்கெண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இப்பொருட்களை உபயோகிக்கும் போது மட்டும் தான், விளக்கின் தீபத்தில் ஓரு ஒளிவட்டம் வெளிப்படுகிறது. இந்த ஒளிவட்டத்தினால் நாம் வசிக்கும் இடம் சுத்தமாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அது மட்டுமல்லாமல், தீபத்தின் இந்தஒளிவட்டம், அது இருக்கும் விதத்திலேயே, வணக்கத்திற்கு உரியதாக இருக்கிறது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்