ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு
கும்பாபிஷேம் நடந்ததும் கோயிலில் 48 நாட்கள் பூஜை நடக்கும். இதற்கு மண்டல பூஜை என்று பெயர். அதன் நிறைவு நாளில் மூலவருக்கு நடக்கும் அபிஷேகம், ஆராதனைக்கு மண்டலாபிஷேகம் என்பர். இதை தரிசித்தவர்களுக்கு கும்பாபிஷேகத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.புது டில்லி வடமேற்கு பகுதியில் உள்ள கேசவ்புரத்தில் ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோயில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய ஆனால் அழகான கோவில் மற்றும் விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோயில் புது டில்லியில் உள்ள முக்கியமான விநாயகர் கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது இக்கோவில் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் ஜூலை 7-ம்தேதி மிக சிறப்பாக நடைபெற்றது. இதன், தொடர்ச்சியாக தினமும் ஹோமம், அபிஷேகம் மற்றும் மண்டலாபிஷேக பூஜைகள் தொடர்ந்து செய்யப்பட்டு, அதன் நிறைவு விழா ஆக-24, காலை கும்பகோணம் ஸ்ரீ சேனாபதி, ஜெ. சுவாமிநாதன் சாஸ்திரிகள், ஆகியோர் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க, மிக சிறப்பாக நடைபெற்றது. அனைத்து ஏற்பாடுகளையும் ஆஸ்திக சமாஜம் தலைவர் டி. என். சிவராமகிருஷ்ணன் செய்திருந்தார்.மூலவர் ஸ்ரீ ஐஸ்வர்யா மகா கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், அதைத் தொடர்ந்து சிவ பரிவாரங்கள், ஆஞ்சநேயர், நவக்கிரகம் சன்னதிகளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஜஸ்வர்ய மகா கணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.மண்டலாபிஷேகம் சிறந்த முறையில் நடந்தேற உதவிய அனைவருக்கும் ஆஸ்திக சமாஜம் அமைப்பின் தலைவர் டி.என்.சிவராமகிருஷ்ணன் தனது நன்றியை தெரிவித்தார்.--- நமது செய்தியாளர், எம்.வி.தியாகராஜன்,