உள்ளூர் செய்திகள்

நொய்டா முருகன் கோவிலில் ஸ்ரீ மஹா ஸ்கந்த சஷ்டி திருவிழா நிறைவு

'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா' என்று பக்தர்களின் கரகோஷத்துடன், மற்றும் வேத மந்திரம் முழங்க, இந்த வருட ஸ்ரீ மஹா ஸ்கந்த சஷ்டி திருவிழா நொய்டா செக்டர் 62, முருகன் கோவிலில் தொடங்கியது. முதல் நாள் பூஜைகள் கணபதி ஹோமத்துடன், ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் தொடங்கின. கணபதி ஹோமம், ஸ்ரீ விக்னேஷ் மற்றும் ஸ்ரீ கணபதியால் நடத்தப்பட்டது. பக்தர்கள் குழுவாக 'சௌந்தர்ய லஹரி' பாராயணம் நடத்தினர். கோவில் நிர்வாகம், 'சத்ரு சம்ஹார ஹோமம்' நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். சத்ரு ஹோமம், என்பது எதிரியை வெற்றி காண்பதற்காக செய்யப்படுவதே. சத்ரு சம்ஹார பூஜை என்றால் எதிரியை அழிப்பது அல்ல, 'எதிரியையும் நல்லவனாக மாற்றுவது' என்று பொருள் கொள்ள வேண்டும். எதிரியை அவனது மனமாற்றத்தின் மூலம் வெற்றி காண்பதற்காக செய்யப்படுகின்ற பூஜை என்றும் பொருள் கொள்ளலாம். மேலும், மாலையில் திருப்புகழ் அன்பர்கள் திருப்புகழ் இசை வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. நவம்பர் 3ஆம் தேதி காலை 'முருக கோஷம்', குழு பாராயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பக்தர்கள் தொடர்ந்து 'முருக கோஷம்' பாராயணம் செய்து வருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ மஹா ஸ்கந்த சஷ்டி திருவிழாவின் ஒரு பகுதியாக, அனைத்து பக்தர்களும் பங்கேற்ற "ஸ்ரீ கார்த்திகேய சகஸ்ரநாம அர்ச்சனை", 4 ஆம் நாள் நிகழ்ச்சி, ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அனைத்து நாட்களிலும் ஸ்ரீ கார்த்திகேயனுக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் ஸ்ரீ கார்த்திகேய சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். அனைத்து நாட்களிலும் பக்தர்கள் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது. சஷ்டி நாளில், கோவில் வளாகத்திற்குள் காவடி, பால்குடம் ஊர்வலம் எடுக்கப்பட்டது. 8-ம் தேதி மாலை 'தேவசேனா திருக்கல்யாணம்' நிகழ்ச்சியும் நடந்தன, மற்றும் மயூர் விஹாரை சேர்ந்த மயூரி குழுவினர், பின்னல் கோலாட்டம் வழங்கினார் . ஸ்ரீ கார்த்திகேயனுக்கு வெள்ளி, விபூதி, அர்த்தநாரீஸ்வரர், புஷ்ப வஸ்திரம், பழனி ஆண்டவர், ராஜ அலங்காரம் என பல்வேறு நாட்களில் அலங்காரம் செய்யப்பட்டது. இக்கோவிலில் ஆறுபடை முருகன் கோவில்களில் செய்வது போலவே அனைத்து பூஜைகளும் நடத்தப்படுகின்றன, என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து பூஜைகளும் பிரம்மஸ்ரீ ஸ்ரீராம் சாஸ்திரிகள், பிரம்மஸ்ரீ சங்கர் சாஸ்திரிகள் ஆகியோர் மேற்பார்வையில் மற்றும் திறமையான வழிகாட்டுதலுடன், ஸ்ரீ மணிகண்டன் சர்மா மற்றும் ஸ்ரீ மோஹித் மிஸ்ரா ஆகியோரால் நடத்தப்பட்டன . இந்த ஆண்டு நடந்த 'ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி' திருவிழாவின் போது 'சூரசம்ஹாரம்' திருச்செந்தூரில் செய்யப்பட்ட அதே பாணியில் செய்யப்பட்டது. கமிட்டி உறுப்பினர்கள் : ரவி சர்மா, வேதமூர்த்தி, பாலாஜி, ஸ்ரீதர் ஐயர், எஸ் காசி விஸ்வநாதன், ராஜு ஐயர், Wg Cdr (ஓய்வு) எஸ் சந்திரசேகர், ராமசேஷன், ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன், பழனி ஆகியோர் ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் உடன் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்த ஆண்டு ஸ்ரீ மஹா ஸ்கந்த சஷ்டி திருவிழாவை சிறப்பாக நடத்தியதற்க்காக நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம மண்டலியின் மகளிர் பிரிவு, 'அடுத்த தலைமுறையினர்', பராமரிப்பு பணியாளர்கள், ஆகியோருக்கு கோயில் நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர். திரளான பக்தர்கள் காவடிகளுடன் நடனமாடுவதை கண்டுகளித்தனர். மேலும், ஸ்கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் மற்றும் இதர ஸ்லோகங்களும் இந்த விழாவில் வாசிக்கப்பட்டன. அவர்களில் சிலர் முருகன் மீது பிரபலமான பாடல்களை பாடினர். குருநாதன் இயற்றி, நொய்டா முருகனைப் போற்றும் பாடல் பாடியது, பக்தர்கள் அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர். 'சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை', என்கிற பழமொழி, நாம் எல்லோரும் அறிவோம். முருகனின் அழகை காண, நொய்டா செக்டர் 62 முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள முருகனை வணங்கினால் 'வெற்றி' நிச்சயம். கோபுரத்தைக் காண வருவோர்க்கு 'கோடி புண்ணியம்'. முருகனுக்கும் எண் 6 க்கும் தொடர்பு அதிகம். முகங்கள் 6, .ஆறெழுத்து மந்திரத்திற்கு உடையவராவார். ஆறுபடை வீடுகளுக்கும் சொந்தக்காரர் ஆவார். 6ஆம் திதியான சஷ்டியில் சூரசம்ஹாரம் செய்தவர் என 6க்கு நெருக்கமானவர். முருகப்பெருமானுக்கு வணக்கம் என பொருள். முருகா என்ற பெயருக்கு தெய்வத்தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மனம், இனிமை என்னும் ஆறு பொறிகளும் உள்ளன. அதே போல் '6 முக கடவுள் முருகன்', '2 முகம் கொண்ட ஸ்ரீ விநாயகர்', நொய்டா ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேய கோவில், செக்டர் '62' இல் இருக்கும் 'நொய்டா முருகன் கோவில்' என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். ஒரே எண்ணம் கொண்ட பக்தர்களால் தொடங்கப்பட்ட வேதிக் பிரசார் சன்ஸ்தான் (VPS), முப்பத்தேழு ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு சேவை செய்து வருகிறது. வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் அதன் இரண்டு கோவில்களான : செக்டர் 22ல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில், நொய்டாவின் பழமையான கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது (1987 இல் பக்தர்களுக்காக திறக்கப்பட்டது); மற்றும் இரண்டாவது, செக்டர் 62ல் இருக்கும் ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேய கோவில் (21 ஆகஸ்ட் 2022 அன்று பக்தர்களுக்காக திறக்கப்பட்டது ) நிர்வகித்து வருகிறது . - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !