ஸ்ரீ தியாகராஜ ஆராதனை நொய்டாவில் திருவையாறு
ஒவ்வொரு ஆண்டும் போலவே, புதுதில்லி ராமகிருஷ்ணாபுரம் தென்னிந்திய சங்கமும், வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் (விபிஎஸ்) இணைந்து நொய்டாவில் திருவையாறு (ஸ்ரீ தியாகராஜ ஆராதனை) நிகழ்வை நொய்டா செக்டர் 62 ல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் நடத்தியது. கணபதி பூஜையுடன் தொடங்கி, கர்நாடக இசை பயிலும் மாணவர்கள் ஸ்ரீ தியாகராஜரின் கிருதிகளை பாடி அஞ்சலி செலுத்தினர். குருவாயூர் டாக்டர் டி.வி. மணிகண்டன் மற்றும் குழுவினர் தலைமையில் பஞ்சரத்ன கிருதிகள் பாடினர். மேலும், இந்த இசை நிகழ்ச்சியில் வயலின்: ம ஹரிகேஷவ் மற்றும் சித்தேஷ் கணேஷ், மிருதங்கம் : அபிஷேக் அவதானி வாசித்தனர். தென்னிந்தியாவின் கர்நாடக இசை தலைநகர் திருவையாறில் தென்னிந்தியாவின் கர்நாடக இசை தலை நகர் திருவையாறில் நடப்பது போல், முழு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. டாக்டர் டி.வி.மணிகண்டனை பாகவதர் வி ராமபத்ரன் கௌரவித்தார். மற்ற அனைத்து கலைஞர்களும் மயூர் விஹார் (பிரிவு 3) இஷ்ட சித்தி விநாயகா ஆலயத்தின் செயலாளர் கே. கோபாலகிருஷ்ணனால் கௌரவிக்கப்பட்டனர். வேதிக் பிரசார் சன்ஸ்தான் சார்பில், வி.ராமபத்ரன் மற்றும் கே.கோபாலகிருஷ்ணன் ஆகியோரை எஸ்.இராதாகிருஷ்ணன் மற்றும் ராஜேந்திரன் கவுரவித்தனர். அனைத்து பூஜைகளையும் கோவில் வாத்தியார் விஸ்வேஸ்வரர் நடத்தி வைத்தார் . முன்னதாக ராமகிருஷ்ணபுரம் தென்னிந்திய சங்கத் தலைவர் ஆர்.கே.வாசன் அனைத்து இசை ஆர்வலர்களையும் வரவேற்றார். துணைத் தலைவர் கிருஷ்ணசாமி அனைத்து கலைஞர்களைப் பற்றியும் நிகழ்ச்சியைப் பற்றியும் விளக்கினார். வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் ராஜு ஐயர் நன்றியுரை வழங்கினார். ராமகிருஷ்ணாபுரம் தென்னிந்திய சங்கம்,60ஆண்டுகளாக இசை ஆர்வலர்களுக்கு சேவை செய்து, கர்நாடக இசையில் இளம் திறமைகளை ஊக்குவிக்க, பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது, அதே சமயம், வி பி எஸ், நொய்டா பக்தர்களுக்கு, கடந்த 37வருடங்களுக்கு மேலாக, சேவை செய்து, அதன் இரண்டு கோவில்களையும் நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்