உள்ளூர் செய்திகள்

சிறப்பு பல கொண்ட வைகாசி விசாகம்

தலைநகர் மயூர் விகார் காருண்ய மகா கணபதி கோவிலில் வைகாசி விசாக பூஜைகள் நடைபெற்றன. பழனி, திருச்செந்தூர், சுவாமி மலை போன்ற முருகன் திருத்தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதரித்தத் திருநாளாகும். வைகாசித் திங்களில் வரும் விசாக நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது நம்பிக்கை.சிவனின் நெற்றிப்பொறி சரவணப்பொய்கையில் சேர அவை ஆறு பொறிகளாகி ஆறு குழந்தைகளாக தோன்றினர். அன்னை பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒரு சேர அணைக்க ஆறுமுகன் தோன்றிய நாள் இன்று. மேலும் இந்த நாளுக்கு வலிமையும் பெருமையும் சேர்க்கும் பல நிகழ்வுகள் வரலாறு மூலம் தெரியவருகிறது. இஷ்வாகு வம்சத்திற்குரிய நட்சத்திரமாக இருப்பதால் விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில் ராம ராவண யுத்தம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது. மணிபல்லவத் தீவில் தீவதிலகை என்ற காவல் தெய்வம் தோன்றி, மணிமேகலையிடம் "வைகாசிப் பௌர்ணமி அன்று கோமுகி என்ற பொய்கையில் அள்ள அள்ளக் குறையாத 'அமுத சுரபி' என்னும் அட்சயப் பாத்திரம் வெளிவரும். உலக மக்களின் பசிப்பிணியை போக்குவதற்காகவே இப்படிப்பட்ட அட்சயப் பாத்திரத்தை உனக்கு வழங்குகிறேன்" என்று கூறி மறைந்தது. இதன்படியே மணிமேகலையும் புத்தர் பிறந்த வைகாசி முழுநிலவில் கோமுகி பொய்கையிலிருந்து வெளியே வந்த அட்சயப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு பூம்புகார் நகருக்குத் திரும்பினாள். விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்குரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பஞ்சபாண்டவரில் ஒருவரான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில்தான். இப்படி பல செய்திகள் இந்த வைகாசி விசாகத்தை சிறப்புறச் செய்கின்றன. முருகன் குடிகொண்டுள்ள அத்தனை தலங்களில் இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. - நமது செய்தியாளர் மீனா வெங்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !