உள்ளூர் செய்திகள்

காக்கும் பிள்ளையார் கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு

மயிலாடுதுறை மாவட்டம், கூறை நாட்டில் காக்கும் பிள்ளையார் கோயில் உள்ளது. இக்கோயிலில், மகா கும்பாபிஷேகம் செய்வதற்காக கோவில் முழுவதும் கருங்கற்களினால் கட்டமைப்பு செய்யப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி மகா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதன், தொடர்ச்சியாக தினமும் ஹோமம், அபிஷேகம் மற்றும் மண்டலாபிஷேக பூஜைகள் தொடர்ந்து செய்யப்பட்டு, அதன் நிறைவு விழா மார்ச் 26 மற்றும் 27ம் தேதி, சென்னை சுவாமிநாதன் மற்றும் மயிலாடுதுறை கார்த்திகேயன் சிவாச்சாரியார்கள் ஆகியோர் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில், மூலவர் காக்கும் பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம், அதைத் தொடர்ந்து முருகன், ஆஞ்சநேயர், நவக்கிரகம் மற்றும் நாக சன்னதிகளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காக்கும் பிள்ளையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டு நாட்கள் நடந்த நிகழ்வில், மயிலாடுதுறை வேத சிவாகம திருமுறை பாடசாலையில் பயிலும் வித்யார்த்திகள் திரளாக இதில் பங்கேற்று வேத பாராயணம் செய்தனர். விழாவின் நிறைவில், சுவாமிநாதன் சிவாச்சாரியார் பேசுகையில், கோயில் பாலாலயம் கடந்த வருடம் ஜூன் மாதம் நடந்து முடிந்து, கோவில் திருப்பணிகள், கட்டமைப்புகள் முழுவதும், கருங்கற்களினால் முற்று பெற்று, கும்பாபிஷேகமும் மிக மிகக் குறுகிய காலத்தில் நடந்து முடிந்து, இன்று மண்டலாபிஷேகம் வரை நம் ஆலயம் வந்துள்ளது. இது கண்டிப்பாக காக்கும் பிள்ளையாரின் பரிபூரண ஆசிகள்தான் என்றார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்