உறவினர்கள் கிண்டலை மீறி சாதித்த இளம்பெண்
இன்றைய நவீன காலகட்டத்தில் வாழும் இளம் தலைமுறையினர், உறவினர்கள் முன்பு தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இதற்காக எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கி கொள்கின்றனர். இவர்களில் ஒருவர் ஸ்ருதி, 34.மைசூரு, ரங்கயானாவில் நாடக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வெளிநாடுகளில் நடக்கும் நாடக நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்தி வருகிறார். தனது வாழ்க்கை பாதையில் அவர் அனுபவித்த கஷ்டங்கள் ஏராளம்.இதுகுறித்து ஸ்ருதி கூறியதாவது:எனது சொந்த ஊர் துமகூரின் திப்டூர் ஆகும். எளிய குடும்பத்தில் பிறந்தேன். எனது குரல் ஆண்கள் பேசுவதை போன்று இருப்பதால், என்னை உறவினர்கள் கேலி, கிண்டல் செய்தனர். 'இந்த உலகத்தில் உன்னால் எதுவும் சாதிக்க முடியாது' என்று மட்டம் தட்டி பேசினர்.எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் எம்.காம்., வரை படித்தேன். படித்து முடித்த பின் ஏதாவது பெரிய வேலைக்கு செல்வேன் என்று பெற்றோர் எதிர்பார்த்தனர். ஆனால், எனக்கு நாடக துறை மீது ஆர்வம் இருந்ததால், ஹம்பி கன்னட பல்கலைக்கழகத்தில் கன்னடத்தில் முதுகலை பட்டம் பெற்றேன்.பின், மைசூரில் உள்ள ரங்கயானாவில் நாடக ஆசிரியராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வேலை கிடைத்தது. ஒவ்வொரு மேடையிலும் ஏறி, என் திறமையை வெளிப்படுத்தி வருகிறேன். மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருகிறேன். முதலில் நான் நாடக ஆசிரியராக வேலை செய்ய எனது குடும்பத்தினர் தயக்கம் காட்டினர். பின், ஏற்று கொண்டனர்.கடந்த மாதம் டில்லியில் நடந்த இந்திய நாடக விழாவில், நானே உருவாக்கி இயக்கிய, 'ஆன் தி சர்பேஸ் நாடகம்' நிகழ்த்தப்பட்டது. இதனை எனக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கிறேன்.ஆண் குரல் என்று என்னை கிண்டல் செய்த உறவினர்கள் இப்போது பாராட்டுகின்றனர். இது மகிழ்ச்சியாக உள்ளது. நம்மை கிண்டல் செய்யும் உறவினர்களைப் பற்றி கவலைப்படாமல் லட்சியத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்பது எனது வேண்டுகோள். எந்த குரலை வைத்து என்னை கிண்டல் செய்தனாரோ, அதே குரல்தான் இன்று எனக்கு சக்தியாக மாறி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார் --- -நமது நிருபர் - -.