- நமது நிருபர் -: பெலகாவி மாவட்டம், ஹுக்கேரி பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா, 17, பி.யு., முதலாம் ஆண்டு மாணவி. இவர் தனது சிறுவயதிலிருந்தே பேச்சில் அதிக ஆர்வம் கொண்டவர். சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி ஆகியோரின் பேச்சு, எழுத்துகளை விரும்பி படிப்பார். இதனாலே, இவரும் பல விஷயங்கள் குறித்து சரளமாக பேசும் அளவுக்கு முன்னேறினார். பள்ளியில் நடக்கும் பேச்சு போட்டிகளில் தவறாமல் பங்கேற்பார். மாவட்ட அளவிலான பேச்சு போட்டிகளில் பலமுறை பரிசு பெற்றார். இதன் காரணமாக, ஜூன் மாதம் சித்ரதுர்காவில் நடந்த மாநில அளவிலான பேச்சு போட்டியில் பெலகாவி சார்பாக பங்கேற்றார். பல மாவட்டத்திலிருந்து, 20க்கும் மேற்பட்ட பி.யு., கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 'இன்றைய காலத்தில் அறத்தின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் நடந்த போட்டியில், அனைத்து மாணவ, மாணவியர்களையும் தோற்கடித்து முதலிடத்தை பிடித்து அசத்தினார். இது, அவரது தந்தை அசோக், தாய் சரிதாவுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது. ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இவரது பேச்சு, நகரில் இருக்கும் மாணவர்களின் தரத்தில் இருப்பதை பார்த்து பலரும் அசந்தனர். இவரை, பெலகாவி மாவட்ட பொறுப்பு அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி பாராட்டினார். இதுகுறித்து, மாணவி ஐஸ்வர்யா கூறியதாவது: மாநில அளவிலான பேச்சு போட்டியில் முதல் முறையாக வெற்றி பெற்று உள்ளேன். இது மிக மகிழ்ச்சியாக உள்ளது. 5,000 ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது. எந்த தலைப்பு கொடுத்தாலும், அதை பற்றிய தகவல்களை சேகரித்து சிறப்பாக பேசுவேன். எதிர்காலத்தில் யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே எனது லட்சியம். ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக மாறி கர்நாடகாவிற்கு சேவை செய்வேன். என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.