உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் /  விலங்குகள் மீது அக்கறை காட்டும் அனுஷா

 விலங்குகள் மீது அக்கறை காட்டும் அனுஷா

- நமது நிருபர் -: இன்றைய உலகில் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகின்றனர். அவ்வகையில், வனத்துறையிலும் பெண்கள் வேகமாக முன்னேறி கொண்டு வருகின்றனர். மைசூரில் உள்ள மிகவும் பிரபலமான ஸ்ரீ சாமராஜேந்திர உயிரியல் பூங்காவில் நிர்வாக இயக்குநராக அனுஷா சில மாதங்களுக்கு முன் பதவியேற்றார். இவர், பதவியேற்ற பிறகு பூங்காவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பார்வையாளர்களின் வசதிக்கு முன்னுரிமை அளித்தார். அதே சமயம் விலங்குகளின் உடல்நிலை மீது அக்கறை காட்டுவதிலும் சமரசம் செய்யவில்லை. இத்தனை சக்தி வாய்ந்த பொறுப்பில், நம் மாநிலத்தை சேர்ந்த அனுஷா இருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயமே. தீர்மானம் இவர், தனது சிறுவயதிலேயே புத்தகம் படிக்கும் பழக்கத்தை கொண்டவர். இவர், பூர்ணசந்திரே தேஜஸ்வியின் புத்தகங்களை விரும்பி படிப்பார். இவரின் புத்தகங்களில் வரும் கதைகள் பெரும்பாலும் வன விலங்குகள் தொடர்பானவையே. இதனால், அவருக்கு விலங்குகள் மீது ஈர்ப்பு வந்தது. எனவே, அவற்றை பாதுகாக்க வன அதிகாரி ஆக வேண்டும் என தீர்மானித்தார். இதனால், கல்லுாரியில் வனவியலில் இளங்கலை பட்டம் படித்தார். பின், 2017ல் வனத்துறையில், 'ரேஞ்சர்' பணியில் சேர்ந்தார். துறைசார் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம், உதவி வனப் பாதுகாவலராக பதவி உயர்வு பெற்றார். நாகரஹொளே புலிகள் காப்பகத்தில் ஏ.சி.எப்., ஆக பணியமர்த்தப்பட்டார். அப்போது, சிறப்பாக பணியாற்றிய காரணத்திற்காக டி.சி.எப்., எனும் துணை வனப் பாதுகாவலராக பதவி உயர்வு பெற்றார். புகழ் இவர் கடமைக்கு வேலை செய்யா மல், உண்மையிலே வன விலங்குகள் நலனுக்காக கடுமையாக உழைக்கிறார். இதனால், இவர் மக்களுக்கு பிடித்தமான அதிகாரியாக மாறுகிறார். குறிப்பாக, வன விலங்குகள் அச்சுறுத்தல் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இப்படி பல நற்பெயர்களை குறுகிய காலத்தில் வாங்கினார். இதனால், கடந்த ஆண்டு புகழ்பெற்ற மைசூரு உயிரியியல் பூங்காவின் நிர்வாக இயக்குநராக பணியமர்த்தப்பட்டார். தற்போது, சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அனுஷா கூறியதாவது: வனத்துறையில் ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. உயர் பதவி வகிக்கும் போது அதிக உடல் உழைப்பு தேவைப்படாது. அறிவு மற்றும் நிர்வாகம் சார்ந்த விஷயங்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து பயணித்தால் வெற்றி நிச்சயம். கடினமாக உழைத்தால் நமக்கான அங்கீகாரம் நம்மை தேடி வரும். மழைக்காலங்களில் மாதக்கணக்கில் காட்டுக்குள் தங்கி பணிபுரிந்து உள்ளேன். உழைப்புக்கேற்ற ஊதியம். எந்த பதவியும் எளிதில் கிடைத்துவிடாது. அனைவராலும் அனைத்தும் முடியும். நம்பிக்கையை இழக்காமல் உழையுங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ