விஞ்ஞானிகள் பட்டியலில் தனியார் பல்கலைக்கழக பேராசிரியை
கர்நாடகாவின் திறமைக்கு உலகளாவிய அங்கீகாரம் பல ஆண்டுகளாக கிடைக்கிறது. கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஏதாவது ஒரு துறையில் உலக அளவில் சாதித்து வருகின்றனர். இந்த பட்டியலில், தனியார் பல்கலைக் கழகத்தின் பேராசிரியையும் இணைந்து உள்ளார். மங்களூரு முக்காவில் உள்ள சீனிவாஸ் பல்கலைக் கழகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் பேராசிரியையாக பணியாற்றுபவர் சந்தியா ஷெனாய். கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உலகின் முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில் சந்தியாவின் பெயரும் உள்ளது. பட்டியலில் இவரது பெயர் இருப்பது முதன்முறை அல்ல. தொடர்ந்து மூன்று முறையாக இடம் பிடித்து அசத்தி உள்ளார். சிறந்த விஞ்ஞானிகளால் தயாரிக்கப்படும் ஆராய்ச்சி கட்டுரைகள், அறிவார்ந்த மதிப்பீட்டின் அடிப்படையில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் விஞ்ஞானிகள் பெயர் பட்டியலை வெளியிடுகிறது. கழிவுகளை மின்சாரமாக மாற்றுவதற்கான திறமையான வெப்ப மின் முறையை உருவாக்குவதிலும், நிலையான எரிசக்தி தீர்வுகளுக்கான ஆற்றலை வழங்கவும் சந்தியா மேற்கொண்ட ஆராய்ச்சி, அது தொடர்பாக எழுதிய கட்டுரைக்கு அங்கீகாரம் கிடைத்து உள்ளது. சந்தியாவின் சாதனையை பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், குடும்பத்தினர் வெகுவாக பாராட்டி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் முதல் 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில், சந்தியா இடம் பிடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். கல்விக்கு பெயர் பெற்ற தட்சிண கன்னடா மாவட்டத்தில், இதுபோன்று இன்னும் நிறைய பேர் விஞ்ஞானிகளாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த மே மாதத்தில், தட்சிண கன்னடாவின் புத்துாரை சேர்ந்த டாக்டர் நினாத் லஸ்ராடோவுக்கு, தனது துறையில் செய்த சாதனைக்காக, 'போர்ப்ஸ்' பத்திரிகையின், 30க்கு 30 பட்டியலில் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. - நமது நிருபர் -