ஒன்றரை வயது குழந்தையின் அபார நினைவாற்றல்
- நமது நிருபர் -: சாதனை என்பது யாருடைய சொத்தும் அல்ல. சாதனை செய்ய வயது கட்டுப்பாடும் இல்லை. உழைப்பும், குறிக்கோளும் இருந்தால் போதும். அதற்கு தக்க பிரதிபலன் கிடைக்கும். இதற்கு உதாரணம் நிஷ்விகா. வெறும் ஒன்றரை வயதேயான இந்த சுட்டிக்குழந்தையின் சாதனை, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ஹாவேரி நகரின், சுபாஷ் சந்திர நகரில் வசிப்பவர் மஞ்சுநாத் கலிதாளா. இவரது மனைவி காஜல். தம்பதிக்கு நிஷ்விகா என்ற மகள் உள்ளார். இவர் பிறந்து, ஓராண்டு ஏழு மாதங்களே ஆகின்றன. மஞ்சுநாத் டீக்கடை வைத்துள்ளார். ஏழமையான குடும்பம். இவரது மகள் நிஷ்விகா அசாத்திய சாதனை செய்துள்ளார். நிஷ்விகாவுக்கு அபார நினைவு சக்தி உள்ளது. 21 நாடுகளின் கொடிகளை நொடிப்பொழுதில் அடையாளம் காட்டுகிறார். 22 பறவைகள், 22 பிராணிகள், 17 விதமான பழங்கள், அன்றாடம் பயன்படுத்தும் 25 பொருட்களின் பெயரை கேட்டாலும், குழப்பமின்றி சட்டென கூறுகிறார். அபூர்வமான சாதனையை அடையாளம் கண்ட, இந்திய சாதனை புத்தக அதிகாரிகள், ஹாவேரிக்கு வந்து குழந்தையின் அறிவுத்திறனை பரிசீலித்தனர். அதன்பின் ஜூலை மாதம் சான்றிதழும், பதக்கமும் வழங்கி சிறுமியை கவுரவித்தனர். இது குறித்து, மஞ்சுநாத் கூறியதாவது: என் மகளுக்கு நினைவு சக்தி அதிகம். ஒரு முறை சொல்லி கொடுத்தால் மறப்பது இல்லை. மிகவும் சூட்டிகை. பல நாடுகளின் கொடிகளை, அடையாளம் காட்டும் திறன் உள்ளது. பலரும் ஆண் குழந்தை வேண்டும் என, விரும்புவர். ஆனால் எனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது என் மகள், இந்த சிறிய வயதில் சாதனை செய்தது, எங்களுக்கு பெருமை அளிக்கிறது. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த எங்களுக்கு, மகளால் பெருமை கிடைத்துள்ளது. இந்திய கின்னஸ் சாதனை புத்தகத்தில், இடம் பிடித்த பின் பலரும் எங்களை தொடர்பு கொண்டு பாராட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.