உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / 80 வயதிலும் விளையாட்டில் ஜொலிக்கும் குருசாந்தப்பா

80 வயதிலும் விளையாட்டில் ஜொலிக்கும் குருசாந்தப்பா

சாதனைக்கு வயது தடையல்ல என்பது உண்மை தான். ஆனால், நம் இலக்கை எட்டினோமா என்பது தான் கேள்வி. இதில் இரண்டையும் சாதித்து காட்டி உள்ளார், 80 வயதான குருசாந்தப்பா.தாவணகெரே நகரம் எஸ்.எஸ்., லே - அவுட் 'பி' பிளாக்கை சேர்ந்தவர் குருசாந்தப்பா. சிறு வயதில் இருந்தே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர்.பள்ளி, கல்லுாரிகளில் மல்யுத்த வீரர், வாலிபால், கால்பந்து போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் பெற்றுள்ளார். கல்லுாரி படிப்பை முடித்த பின், ஷிவமொக்காவில் கூட்டுறவு வங்கியின் சென்னகிரி கிளையில் காசாளராக பணியாற்றினார்.

ராஜினாமா

இப்பணியை ராஜினாமா செய்த அவர், நியாமதியில் 15 ஆண்டுகளாக விவசாயம் பார்த்து வந்தார். விவசாயியாக இருந்தாலும், விளையாட்டை மறக்கவில்லை. 2011ல் நடந்த வயதில் மூத்தோருக்கான 'மாஸ்டர்ஸ் தடகள' போட்டியில் பல பரிசுகளை பெற்றார்.மாநிலம் மட்டுமின்றி, புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா, கோல்கட்டா, மும்பை, சென்னை, கேரளா போன்ற மாநிலங்களில் நடந்த விளையாட்டு போட்டிகளிலும் நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப், குண்டு எறிதல், வேகமாக நடப்பது, ஓட்டப்பந்தயம் போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார்.கடந்த 2014ல் இலங்கை, மலேஷியாவில் நடந்த போட்டிகளில் பங்கேற்றாலும், பரிசுகள் பெறவில்லை. ஆனால், 2017ல் தாய்லாந்தில் வெண்கல பதக்கம் பெற்றார்.

வயதாகவில்லை

தன் விளையாட்டு ஆர்வம் குறித்து குருசாந்தப்பா கூறியதாவது:என் உடம்புக்கு தான் 80 வயதாகிறதே தவிர, எனக்கு அல்ல. தாய்வானில் நடந்த மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்றிருக்க வேண்டும்.அந்த நேரத்தில் கொரோனா தொற்று உலகம் முழுதும் பரவியதால் போட்டி நடக்கவில்லை. விளையாட்டின் மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தை புரிந்து கொண்டு, பலரும் 10,000, 20,000 ரூபாய் நன்கொடை அளிக்கின்றனர்.விளையாட்டுக்காக நாடு முழுதும் பயணித்து உள்ளேன். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில், சுத்தியல் வீசுதல், டிரிபிள் ஜம்பில் தங்கப்பதக்கம் வென்றேன்.மங்களூரில் நடந்த தென்னிந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில் நடந்த போட்டியிலும் டிரிபிள் ஜம்ப்பில் தங்கமும்; குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கமும் பெற்றேன். அடுத்த மாதம் பெங்களூரில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.இவரின் பேத்தி சஹானா கூறியதாவது:இந்த வயதிலும் ஓய்வெடுக்காமல், அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும் நபராக, என் தாத்தா உள்ளார். அவரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், வேகநடை என அனைத்து விளையாட்டுகளிலும் ஆர்வமுடன் பங்கேற்கிறார்.ராஜஸ்தான், புதுடில்லி, இலங்கை, மலேஷியா, மங்களூரில் நடந்த தேசிய, சர்வதேச விளையாட்டுகளில் அவர் பங்கேற்பது, எங்களுக்கு பெருமையாக உள்ளது. இதனால், எங்களுக்கு உற்சாகம் ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை