பாட்னாவில் சாதித்த கர்நாடகா வீரர்கள்
பீஹார் மாநிலம், பாட்னாவில் உள்ள பாடலிபுத்ரா விளையாட்டு மைதானத்தில் இளைஞர்களுக்கான 20வது தேசிய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன.கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆண்கள் பிரிவில், 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில், கர்நாடகாவை சேர்ந்த சையத் சபீர், மஹாராஷ்டிராவை சேர்ந்த நிவேத் கிருஷ்ணா, ஆதித்யா பிசாலா ஆகிய முன்னனி விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். சவால் நிறைந்த போட்டியில், சபீர் 21.67 வினாடிகளில் ஓடி முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார்.அதேபோல், பெண்கள் பிரிவில் நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில், நம் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷிதா மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும்; 'ஹெப்டத்லான்' எனும் தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.இதன் மூலம், இரண்டு பதக்கங்களை வென்று, மாநிலத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார். - நமது நிருபர் -