உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / தடகளம் டு கிரிக்கெட் வீராங்கனை

தடகளம் டு கிரிக்கெட் வீராங்கனை

தடகள வீராங்கனையாக இருந்து, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து, பல போட்டிகளில் வெற்றி பெற்று, கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்தவர் பிரதிபா பட்.இவர், பெங்களூரில் 1968ல் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரர்கள். சிறு வயதில் துறுதுறு வென்று இருப்பார். வீதியில் சகோதரர்கள் கிரிக்கெட் விளையாடுவர். அவர்களுடன் இவரும் விளையாடி வந்தார்.

தொந்தரவு

ஆனால், பள்ளியில் தடகள வீராங்கனையாக செயல்பட்டார். தனது 16வது வயதில் பள்ளி கோடை விடுமுறையில் வீட்டில் அமர்ந்திருந்தார். தினமும் தாயாரிடம் ஏதாவது கேட்டு தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்.ஒரு நாள், இவரின் பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுவன், வெள்ளை நிற சட்டை, பேன்ட் அணிந்து கொண்டு, கையில் கிரிக்கெட் பேட்டுடன் சென்றார். அச்சிறுவனை நிறுத்திய பிரதிபா பட்தாயார், 'எங்கு செல்கிறாய்' என கேட்டபோது, 'கிரிக்கெட் பயிற்சி'க்கு என்று கூறினார்.பிரபிரதிபாவின் தாயார் என்ன நினைத்தாரோ, என் மகளை அழைத்து சென்று, பயிற்சியில் சேர்த்து விடு என்று கூறியுள்ளார்.மேற்கொண்டு என்ன நடந்தது என்பது பற்றி பிரதிபா பட் கூறியதாவது:பயிற்சிக்கு சென்ற முதல் நாள், எனக்கு இன்னும் ஞாபகம் உள்ளது. கிரிக்கெட் பயிற்சியாளராக கிருஷ்ணா இருந்தார். 'என்னிடம் என்ன செய்வாய்' என்று கேட்டார். அதற்கு நான், எனக்கு தெரியாது' என்றேன்.அத்தகைய பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை. என்னிடம் பந்தை கொடுத்து, வீச சொன்னார். நான் வீசிய பந்து, மிகவும் வேகமாக திரும்பியது. இதை பார்த்த கிருஷ்ணா, ஆச்சரியம் அடைந்தார்.சில நாட்களுக்கு பின், மைதானம் ஒன்றுக்கு அழைத்து சென்றார். அங்கு கர்நாடக மகளிர் கிரிக்கெட் அணியினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த சாந்தா ரங்கசாமியிடம், என்னை சுட்டிக்காட்டி, இப்பெண் ஒரு நாள் இந்தியாவுக்காக விளையாடுவார்' என்று அறிமுகப்படுத்தினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

திருப்புமுனை

சில நாட்களுக்கு பின், 1987ல் கிளப்' போட்டியில் பங்கேற்றேன். போட்டி முடிந்ததும், சாந்தா ரங்கசாமி என்னை பார்த்து, தடகள விளையாட்டை விட்டு, கிரிக்கெட் மீது கவனம் செலுத்து. இதனால் இரண்டு, மூன்று ஆண்டுகளில் இந்திய அணியில் இடம் பெறுவாய்' என்றார். அவரின் இந்த வார்த்தை எனக்குள் ரீங்காரமாக ஒலித்து கொண்டே இருந்தது. தேசிய அளவிலான ஜூனியர்ஸ் கிரிக்கெட் போட்டியில் கர்நாடக அணியில் இடம் பெற்றேன். கேரளாவில் நடந்த போட்டிகளில், 13 விக்கெட்களை வீழ்த்தி, 'சிறந்த பந்து வீச்சாளர்' விருதை பெற்றேன்.அடுத்தாண்டு நடந்த போட்டியில், கர்நாடகா அணியில் கேப்டனாக களம் இறங்கினேன். லக்னோவில் நடந்த போட்டியில், சிறந்த பந்து வீச்சாளர் விருது பெற்றேன். 22 ஆண்டுகளுக்கு பின், 'ஜூனியர் சாம்பியன்ஷிப்' பட்டத்தை கர்நாடகா பெற்றது.தொடர்ந்து கர்நாடக சீனியர் அணியில் இடம் பெற்றேன். 1993ல் ஹைதராபாதில் நடந்த அரையிறுதி போட்டியில், ஏர் இந்தியா அணியுடன் மோதினோம். பத்து ஓவரில் 55 ரன்கள் எடுக்க வேண்டும். ஏற்கனவே ஐந்து விக்கெட்களை இழந்து விட்டோம்.அப்போது நானும், மாலா சுந்தரேசனும் இணைந்து விளையாடி, அணியை இறுதி சுற்றுக்கு கொண்டு சென்றோம். இதிலும், 'ஆட்ட நாயகி' விருது கிடைத்தது.

1999ல் ஓய்வு

கடந்த 1991ல் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும்; 1995ல் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் இந்திய அணியில் இடம் பெற்றேன். இப்போட்டிகளில் மொத்தம் ஒன்பது விக்கெட்களை வீழ்த்தினேன். 1993 முதல் 1998 வரை 22 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, மொத்தமாக 136 ரன்கள் எடுத்தேன். 28 விக்கெட்களை வீழ்த்தினேன்.இந்த கால கட்டத்தில் எனக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் பிறந்தனர். குடும்பம் - விளையாட்டு என ஒரே நேரத்தில் இரு படகுகளில் பயணிக்க முடியாது என்பதை உணர்ந்தேன். 1999ல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றேன்.அதன் பின்னரும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணியை வழிநடத்தும்படி எனக்கு மின்னஞ்சல் வந்தது. பலரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வலியுறுத்தினர். ஆனால், ஏற்கனவே முடிவெடுத்ததால், 'நோ' சொல்லி விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ