உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / காது கேளாதோர் தேசிய டி - 20 கோப்பையை தட்டி துாக்கிய கர்நாடக அணி

காது கேளாதோர் தேசிய டி - 20 கோப்பையை தட்டி துாக்கிய கர்நாடக அணி

கிரிக்கெட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி விளையாடும் விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. இந்த கிரிக்கெட்டை மாற்றுத் திறனாளிகள் பலரும் விரும்பி விளையாடுகின்றனர். இதற்கு காரணம், அவர்கள் பலரும் சிறுவயதில் பார்த்து ரசித்த கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி போன்றோரே.காது கேளாதோருக்கான தேசிய அளவிலான, 'டி 20' கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இப்போட்டியை ஹரியானா காது கேளாதோர் விளையாட்டு கவுன்சிலுடன் இணைந்து, புதுடில்லியில் உள்ள அனைத்து அகில இந்திய காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் சேர்ந்து நடத்தியது.கடந்த 19ம் தேதி ஹரியானாவின் காதர்பூரில் துவங்கியது. இதில், 17 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதில், கர்நாடக அணியும் ஒன்றாகும். இத்தொடரில் குரூப், 'பி'யில் கர்நாடக அணி களம் கண்டது. இதில், ஒடிசா, மத்திய பிரதேசம், புதுடில்லி அணிகளை வீழ்த்தி, குரூப் 'பி' யில் முதலிடத்தை பிடித்தது.இதனால், அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதி போட்டியில், பலம் வாய்ந்த அணியான தமிழக அணியை எதிர்கொண்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், தமிழக அணியை சுலபமாக வென்று கர்நாடக அணி இறுதிப் போட்டிக்கு தேர்வானது.

பலப்பரீட்சை

இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியை கர்நாடக அணியை எதிர்கொள்ள தயாராக இருந்தது. இறுதிப்போட்டி கடந்த 24ம் தேதி, ஹரியானாவின் குருகிராமில் துவங்கியது. இறுதிப் போட்டியில், கர்நாடக அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்திலே அதிரடியாக பவுண்டரிகளை அடித்து ஆடியது. அணியின் கேப்டனும் ஆல் ரவுண்டருமான சுப்ரமணி சிங் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். துணை கேப்டன் சவுபன் ஆர்மர் 34 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு, 177 ரன்களை எடுத்து, 178 ரன்களை பஞ்சாப் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கோலிக்கு மட்டும்

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும், சிறப்பாக பந்துவீசிய சுப்ரமணி சிங் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இதனால், இறுதிவரை போராடி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. எனவே, கர்நாடக அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது.இந்த வெற்றி குறித்து, கர்நாடக அணி வீரர்களில் ஒருவரான ஜே.எஸ்.குஷாலின் தந்தை சிவகுமார் கூறியதாவது:பல மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கர்நாடக அணியில் உள்ளனர். இவர்கள் வெவ்வேறு தனியார் பயிற்சி மையங்களில் பயின்று வருகின்றனர். வாரம் அல்லது மாதம் ஒரு முறை அனைத்து வீரர்களும் பயிற்சிக்காக ஒன்று கூடுவர்.தனியார் பயிற்சி முகாம்களில், பயிற்சி பெறுவதால் பணம் அதிகம் செலவாகிறது. என் மகன், மற்றும் அனைத்து வீரர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு இந்த வெற்றி. இந்த போட்டியில் கலந்து கொண்டதால், ஒவ்வொரு வீரருக்கும் 10,000 ரூபாய்க்கு மேல் செலவாகி உள்ளது. எனவே, நிதி நெருக்கடியால் வீரர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.விராத் கோலி, ரோஹித் சர்மா போன்ற விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவு நிதி வழங்கப்படுகிறது. ஆனால், வளர்ந்து வரும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு யாரும் நிதி உதவி அளிப்பதில்லை. எனவே, அரசு நிதி உதவி அளித்து உதவ வேண்டும் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை