உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / கோல்ப் விளையாட்டில் சாதிக்கும் குடகு மாணவி

கோல்ப் விளையாட்டில் சாதிக்கும் குடகு மாணவி

இந்தியாவில் பிரபலமாகி வரும் கோல்ப் விளையாட்டில், குடகுவை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி, மாநிலம், தேசிய அளவில் சாதனை படைத்து வருகிறார். குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் ரியான்கா திம்மையா, 13. பெங்களூரு பி.ஜி.எஸ்., இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே கோல்ப் விளையாட்டில் ரியான்காவுக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது, பி.ஜி.எஸ்.ஐ.ஆர்.எஸ்., கோல்ப் அகாடமியில் சேர்ந்து பயிற்சியை துவக்கினார். அங்கு அவருக்கு, திரிஷுல் சின்னப்பா பயிற்சி அளித்தார். அதுபோன்று, பள்ளியிலும் கோல்ப் பயிற்சியாளர் ரேவண்ணா, ரியான்காவுக்கு பயிற்சி அளித்து வருகிறார். அதுபோன்று, உடலை ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ள, தேசிய தடகள வீரர் மதன் குமார் உதவுகிறார். சிறு வயது முதல் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை குவித்து உள்ளார். கடந்தாண்டு மெர்கரா டவுன்ஸ் கோல்ப் கிளப், பெங்களூரு கோல்ப் கிளப், பெங்களூரு குளோவர் கிரீன்ஸ் ஆகிய போட்டிகளில், வெற்றி பெற்றார். குறிப்பாக, பெங்களூரு கர்நாடகா கோல்ப் சங்கம் சார்பில் நடந்த போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தார். இது அவரது தேசிய விளையாட்டு பயணத்தில் மைல் கல்லாக அமைந்து உள்ளது. இதன் மூலம், ஐ.ஜி.ஐ., எனும் இந்திய கோல்ப் சங்கத்தின் தேசிய சுற்றுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளார். இதன் மூலம், அவர், கர்நாடகா சார்பில் போட்டியிடுவார். இவரின் வெற்றிக்கணக்கு இந்தாண்டும் துவங்கி உள்ளது. பெங்களூரு கோல்ப் கிளப்பில் நடந்த, 'சவுத் ஜோன் டூர்ஸ் கேர்ள்ஸ் பி' பிரிவில் வெற்றி பெற்றார். குடகு, மைசூரு என உள்ளூர் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம், புதுடில்லியில் நடந்த 'யு.எஸ்., கிட்ஸ் இந்தியன் சாம்பியன்ஷிப்' போட்டியில், எட்டு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற ரியான்கா, நான்காவது இடத்தை பிடித்து, ஆச்சரியப்பட வைத்தார். இதற்கு அவரின் ஒழுக்கம், விடாமுயற்சி, விளையாட்டில் ஆர்வமே காரணம். கோல்ப் மட்டுமின்றி, படிப்பு, விளையாட்டு, நீச்சல், என்.சி.சி., என அனைத்து துறைகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு உள்ளார். கோல்ப் விளையாட்டில் சாம்பியனாக இருக்கும் 'நெல்லி கோர்டா'வும், கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அவருக்கு உத்வேகம் அளிப்பதாக தெரிவிக்கிறார். இந்திய கோல்ப் விளையாட்டில், வளர்ந்து வரும் நட்சத்திரமாக ரியான்கா திம்மையா, தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார். வரும் நாட்களில், சர்வதேச அளவில் தனது முத்திரையை பதிக்க ஆர்வமுடன் காத்திருக்கிறார். - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை