பார்வையற்றோர் கிரிக்கெட்டில் சாதிக்கும் பிரகாஷ் ஜெயராமையா
நல்ல உடல்வாகு கொண்டவர்களை விட, மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். அந்த துறையில் ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவர். இவர்களில் ஒருவர் பிரகாஷ் ஜெயராமையா, 39. இந்திய ஆண்கள் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும், அணியின் விக்கெட் கீப்பராகவும் உள்ளார். கர்நாடகாவின் ராம்நகர் சென்னப்பட்டணாவை சேர்ந்த பிரகாஷின் தந்தை பெயர் ஜெயராமையா. தாய் ஜெயலட்சுமம்மா. கடந்த 1984ம் ஆண்டு பிறந்தார். பிறக்கும் போது அவருக்கு கண்ணில் எந்த குறைபாடும் இல்லை. பிரகாஷ் மூன்று மாத குழந்தையாக இருந்த போது, பக்கத்து வீட்டை சேர்ந்த 3 வயது குழந்தை ஊசியை எடுத்து விளையாட்டு தனமாக பிரகாஷின் இரண்டு கண்களிலும் குத்தி விட்டது. இதனால் அவருக்கு பார்வை பறிபோனது. 8 வயது வரை கண் தெரியாமல் வளர்ந்தார். இந்நிலையில், பிரகாஷ் பெற்றோருக்கு டாக்டர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் செய்த அறுவை சிகிச்சையால் வலது கண்ணில் ஓரளவு பார்வை கிடைத்தது. ஆனால் இடது கண்ணில் பார்வை வரவே இல்லை. ராம்நகரில் உள்ள பி.ஜி.எஸ்., பார்வையற்றோர் பள்ளியில் 10ம் வகுப்பு வரை பிரகாஷ் படித்தார். பள்ளியில் படிக்கும் போதே கிரிக்கெட் மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. ராம்நகர் பகுதியில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை தவறாமல் பார்க்க சென்று விடுவார். வானொலியில் கிரிக்கெட் போட்டி வர்ணனைகளை கேட்டு வந்தார். பிரகாஷ் தந்தை ஜெயராமையா லாரி டிரைவராக இருந்தார். ஒரு விபத்துக்கு பின் வாகனம் ஓட்டுவதை நிறுத்தினார். ஜெயலட்சுமம்மா தையல் தொழிலாளி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றினார். பிரகாஷுக்கு கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் இருந்ததை உணர்ந்து கொண்ட அவரது தாய், கிரிக்கெட் விளையாடுவதற்கு பிரகாஷுக்கு ஊக்கம் அளித்தார். பள்ளி அளவிலான போட்டிகளில் பேட்டிங்கில் ஜொலித்ததால், 'சமர்த்தனா' பார்வையற்றோர் அறக்கட்டளை பார்வை பிரகாஷ் மீது விழுந்தது. அவர்கள் பிரகாஷுக்கு கிரிக்கெட் விளையாட நிறைய உதவிகள் செய்தனர். கடந்த 2004ல் அவருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்தனர்.நிறைய கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்ததால் கடந்த 2010ல் இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 149 ரன்கள் எடுத்து அசத்தினார். கடந்த 2022ல் பெங்களூரில் நடந்த பார்வையற்றோருக்கான உலக கோப்பை போட்டியில் 5 ஆட்டங்களில் முறையே 96, 99, 116, 99, 99 ரன்கள் அடித்து அசத்தினார். 5 போட்டியிலும் ஆட்டமிழக்கவில்லை. கடினமான நேரங்களில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம், அணிக்கு வெற்றி தேடி கொடுப்பது பிரகாஷுன் ஸ்டைலாக உள்ளது. பார்வையற்றோர் கிரிக்கெட்டில் அவர் இன்னும் நிறைய சாதிக்க நாமும் வாழ்த்தலாமே! - நமது நிருபர் -