ஹூன்சூரில் திறக்கப்படாத உள் விளையாட்டு அரங்கம்
விளையாட்டு வீரர்களை வளர்க்கவும், ஊக்கப்படுத்தவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், மைசூரு மாவட்டம் ஹூன்சூரில் 2 கோடி ரூபாயில் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டும், நான்கு ஆண்டுகளாக திறக்கப்படாமல், வீரர்களின் கனவில் மண் விழுந்துள்ளது.மாநிலத்தின் அனைத்து மாவட்டம், தாலுகாக்களிலும் விளையாட்டு மைதானங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதில் பெரும்பாலானவை மோசமான நிலையில் இருக்கும். ஆனாலும், வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.ஹூன்சூரில் உள்ள வெளிப்புற மைதானத்தின் நிலை மோசமாக உள்ளது. பார்வையாளர்கள் இருக்கையில், நாம் அமருகிறோமோ இல்லையோ, நமக்கு முன் புற்கள் வளர்ந்து, சிறுசிறு பூச்சிகளுக்கு இருப்பிடமாகமாறி உள்ளன. கோரிக்கை
இங்கு ஜிம்னாசியம், பேட்மின்டனுக்காக உள் விளையாட்டு அரங்கம் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாநில இளைஞர் மேம்பாட்டு, விளையாட்டு துறை சார்பில், ஹூன்சூரில் 2016 - 17ல் இரண்டு கோடி ரூபாயில் ஜிம்னாசியம், பேட்மின்டன் விளையாட்டுக்காக, உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி துவங்கியது. 2019 - 20ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் வீரர்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.மைதானம் கட்டப்பட்டும், பேட்மின்டன் விளையாடும் வீரர், வீராங்கனைகள், வீதிகளில் அல்லது தனியார் உள்விளையாட்டு அரங்கில் கட்டணம் செலுத்தி பயிற்சி எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இவ்விஷயத்தில் மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வீரர்கள் வேதனை
இரண்டு கோடி ரூபாயில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கம், திறக்கப்படாமல், மக்கள் வரிப்பணம் வீணாகிறது. 60 முதல் 70 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நகரில், விளையாட்டுக்கு போதிய வசதிகள் இல்லாமல் வீரர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.இந்த அரங்கத்தை கட்டிய நிர்மிதி கேந்திராவின் பொறியாளர் ரக் ஷித் கூறியதாவது:இந்த விளையாட்டு அரங்கில், ஜிம்னாசியம், மூன்று பேட்மின்டன் மைதானங்கள் உள்ளன. கூடுதலாக ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி அறைகளும் உள்ளன. விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு தங்கும் அறையும், ஓய்வு அறையும் உள்ளன.பேட்மின்டன் மைதானத்தில் மரத்திலான தரை பதிக்கும் பணி மட்டுமே பாக்கி உள்ளது. மாநில விளையாட்டு கமிஷனர் சேத்தன், சமீபத்தில் இங்கு வருகை தந்தார். மைதானத்தின் நிலையை கண்டு வேதனை தெரிவித்தார். சில சீரமைப்பு பணிகளை செய்வது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க கூறிய அவர், இதற்கான நிதியை பெற்றுத்தருவதாக தெரிவித்தார். விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.இது குறித்து, தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஹரிஷ் கவுடாவிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், ''உள் விளையாட்டு அரங்கம் தொடர்பாக, விளையாட்டு துறை அதிகாரிகளுடன் பேசிவிட்டேன். பொது மக்களுக்கும் சேர்த்து வசதிகள் செய்ய, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். நிதி கிடைத்ததும், தேவையான பொருட்கள் வாங்கப்படும்,'' என்றார்.