பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா?
- நமது நிருபர் -: கர்நாடகாவில் பழங்குடியினர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்தவர் நாகேந்திரா. வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், அவரிடம் இருந்த இரண்டு துறைகளும், முதல்வர் சித்தராமையா வசம் சென்றன. அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத நிறைய துறைகளை, முதல்வர் கவனித்து வரும் நிலையில், விளையாட்டு துறை மீது முதல்வரால் அதிக கவனம் செலுத் த முடியவில்லை. எப்போதாவது தான், விளையாட்டு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விளையாட்டு துறைக்கு என, தனி அமைச்சர் இல்லாதது, வீரர், வீராங்கனையரை வருத்தம் அடையச் செய்துள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் கர்நாடக சட்டசபையில், நிதி துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். ஒவ்வொரு துறைகளின் அமைச்சர்களுடன் தினமும் ஆலோசித்து, உங்கள் துறைக்கு பட்ஜெட்டில் என்னென்ன வேண்டும் என்று கேட்டு வருகிறார். ஆனால், இதுவரை விளையாட்டு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படவில்லை. வரும் நாட்களிலாவது நடக்குமா என்பதும் சந்தேகமாகவே உள்ளது. அதனால், பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தப்படுவது, புதிய மைதானங்கள் அமைப்பது குறித்து, அரசிடம் இருந்து அறிவிப்புகள் வருமா; சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கான ஊக்கத்தொகையை அதிகரிப்பது பற்றி தெரிவிக்கப்படுமா என, வீரர், வீராங்கனையர் எதிர்பார்த்து உள்ளனர். விளையாட்டு துறைக்கு, முதல்வர் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.