உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / மணம் வீசும் மட்டன் சுக்கா

மணம் வீசும் மட்டன் சுக்கா

ஞாயிற்றுக்கிழமையும், அசைவமும் இரட்டை கிளவி போல. அவற்றை யாராலும் பிரிக்கவும் முடியாது; அப்படி பிரித்தால் ஞாயிற்றுக்கிழமையே பொருளற்று போய்விடும் என சொல்லக்கூடிய அளவிற்கு அசைவப் பிரியர்கள் உள்ளனர்.இவர்கள் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான முறையில் சிக்கன், மட்டனை சுவைக்க விரும்புவர். வழக்கம் போல வீட்டில் செய்யப்படும் குழம்பு, வறுவல் ஸ்டைலிலேயே சாப்பிட்டு தங்கள் ஏக்கத்தை போக்கி கொள்வர்.இதுபோன்ற அசைவ பிரியர்களுக்காகவே வித்தியாசமான ஸ்டைலில் 'மட்டன் சுக்கா' செய்யலாம். மட்டன் சுக்கா என்றவுடன் செய்வது நேரமாகும் என நினைத்து சோம்பல் பட கூடாது.பிரியாணி சாப்பிட கூட பொறுமை முக்கியம். பொறுமை இல்லையெனில் எதுவும் கிடைக்காது. ஆகவே, அவசரப்படாமல், பொறுமையாக மட்டன் சுக்கா செய்து சாப்பிடலாம்.

செய்வது எப்படி?

ஒரு குக்கரில் கழுவி வைத்த அரை கிலோ மட்டனை போடவும். அதில் தண்ணீரை தாராளமாக ஊற்றி, லேசாக மஞ்சள் துாள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடவும். ஐந்து விசில் வந்த பின், குக்கரை இறக்கி விடவும். பிறகு, ஒரு வாணலியில் மிளகு, சீரகம், சோம்பு, மல்லி, கிராம்பு, பட்டை, அன்னாசி பூ ஆகியவற்றை போட்டு லேசாக வறுக்கவும்.இந்த கலவையை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும். மீண்டும் வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சீரகம், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.இதில், நறுக்கி வைத்த பெரிய, சின்ன வெங்காயத்தை போட்டு, பச்சை வாடை போகும் அளவிற்கு வதக்கவும். இத்துடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்க்கவும்.பின், மிளகாய்த் துாள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கியதும், வேக வைத்த மட்டனை சேர்க்கவும். லேசாக, ஒரு கிண்டு கிண்டவும். இதன் பின், மட்டனுக்கும், கைக்கும் ஓய்வு கொடுக்கும் வகையில், ஐந்து நிமிடங்கள் மூடி போட்டு மூடவும். ஐந்து நிமிடம் கழித்து, ஏற்கனவே செய்து வைத்திருந்த பொடியை போட்டு, நான்கு நிமிடங்கள் கிளறி கொண்டே இருக்கவும்.இதையடுத்து, இறுதியாக நெய்யை தாராளமாக ஊற்றி, இறக்கினால் மட்டன் சுக்கா தயாரோ தயார். இந்த மட்டன் சுக்காவை சூடான சோற்றில் போட்டு சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். மட்டன் குழம்புடன் தொட்டு சாப்பிட்டால், இன்னும் அதிகமாக சாப்பிட முடியும். -நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை