கொங்கு ஸ்டைல் பருப்பு குழம்பு
கொங்கு மண்டலத்தில் உள்ளோர் வீட்டில் தினமும் செய்யும் ஒரு குழம்பு, கொங்குநாடு பருப்பு குழம்பு. இந்த பருப்பு குழம்பு கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரபலமானது மற்றும் மக்கள் விரும்பி சாப்பிடக்கூடியது. அந்த பருப்பு குழம்பை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்பதை பார்க்கலாம். செய்முறை
ஒரு சிறிய கிண்ணத்தில் சுடு தண்ணீரில் புளியை சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதையடுத்து, புளியை பிசைந்து அதன் சாறை தனியாக ஒரு சிறு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.ஒரு சிறிய குக்கரில் 1 கப் தண்ணீர், துவரம் பருப்பு, மஞ்சள் துாள், ஆமணக்கு எண்ணெய் ஊற்றி மூடி ஐந்து நிமிடங்கள், நான்கு விசில்கள் வரை வைத்து இறக்கவும். இதையடுத்து, குக்கரில் உள்ள துவரம் பருப்பை மத்தால் நன்றாக கூழாக பிசைந்து வைத்து கொள்ளவும். இதன்பின், ஒரு வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி, இடித்த பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெட்டிய சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.இதில், புளி தண்ணீரை ஊற்றி இரண்டு நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பின், கூழாக பிசைந்து வைத்த துவரம் பருப்பை ஊற்றி, கொதிக்க விடவும். நன்றாக கொதித்த பின், நெய்யை ஊற்றி அடுப்பை அணைக்கவும். அவ்வளவு தான் சுவையான கொங்கு நாடு பருப்பு குழம்பு தயார். - நமது நிருபர் -