நாவை நடனமாட வைக்கும் மஹந்தி அல்வா
- நமது நிருபர் -: இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும், அல்வா என்று சொன்னால் யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா?. தமிழகத்தில் திருநெல்வேலி நகரின் பாரம்பரியமாக உள்ள அல்வா, நாடு முழுதும் புகழ்பெற்றது. கேரட், பீட்ரூட், பிரட், பாதாம், அசோகா உட்பட பல வகையில் அல்வா உள்ளது. மஹந்தி அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் ஒரு கப் ரவை இரண்டு கப் பால் ஒரு கப் நெய் ஒரு கப் சர்க்கரை அரை டீஸ்பூன் ஏலக்காய் துாள் இரண்டு டீஸ்பூன் நறுக்கிய முந்திரி. செய்முறை பெரிய பவுலில் ரவையை போட்டு அதனுடன் பாலை ஊற்றி, குறைந்தது, 30 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளுங்கள். அடுப்பை ஆன் செய்து கடாய் வைத்து நெய், சர்க்கரை சேர்த்து குறைந்த சூட்டில் அடுப்பை வைத்து கிளறவும். நெய்யுடன், சர்க்கரை நன்கு சேர்ந்து கேரமல் ஆகி தங்க பழுப்பு நிறமாக மாறும் வரை தொடர்ந்து கிளறவும். இப்போது ரவை, பாலை ஊற்றி ஊற வைத்த தண்ணீரை எடுத்து இதனுடன் சேர்த்து விடுங்கள். இதனுடன் ஏலக்காய் துாள், நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து கிளறி விடவும். ரவை அனைத்து பாலையும் உறிஞ்சும் வரை கிளறினால் போதுமானது. அதிகம் கிளறி விட்டால் அல்வா கெட்டியாக மாறி விடும். அல்வா ஒரு பதத்திற்கு வந்த பின், அடுப்பை ஆப் செய்து 10 நிமிடங்கள் கழித்து அல்வாவை தட்டிற்கு மாற்றி சாப்பிடவும். ரவையில் செய்யப்பட்டது என்பதால், நாவை நடனமாட வைக்கும் சுவையில் இருக்கும். வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.