உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / பண்டிகையில் தித்திக்கும் மைசூரு பாக்கா பூரி

பண்டிகையில் தித்திக்கும் மைசூரு பாக்கா பூரி

மைசூரில் பாக்கா பூரி எனும் 'பாதாம் பூரி' மிகவும் பிரபலம். தீபாவளி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகை நாட்களில், வீடுகளில் இந்த இனிப்பு பதார்த்தத்தை செய்வர். சர்க்கரை பாகில் ஊற வைப்பர். இதன் சுவை, மேலும் மேலும் சாப்பிட துாண்டும்.

பாக்கா பூரி தயாரிக்க

 மைதா மாவு - ஒரு கப் உப்பு - ஒரு சிட்டிகை நெய் - 1 முதல் 2 தேக்கரண்டி தண்ணீர் - கால் கப் கிராம்பு - தேவையான அளவு

செய்முறை

 நெய்யை உருக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு, உருக்கிய நெய், ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். பின் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து, பூரி மாவு பதம் வரும் வரை கலக்க வேண்டும். மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.

சர்க்கரை பாகு தயாரிக்க

 சர்க்கரை - முக்கால் கப் தண்ணீர் - அரை கப் ஏலக்காய் - 4 பொடித்தது குங்கும பூ - ஒரு சிட்டிகை

செய்முறை

 ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து, மிதமான தீயில் வைக்கவும்.  சர்க்கரை முழுதும் கரைந்ததும், தீயை அதிகமாக வைத்து, நான்கு நிமிடம் கொதிக்க விடவும். கொதிக்கும் பாகில் குங்குமப்பூ சேர்க்கவும். நான்கு நிமிடத்துக்கு பின், பாகு வந்த பின், அடுப்பை அணைத்துவிட்டு ஏலக்காய் பொடியை சேர்க்கவும். பாகை அடுப்பில் வைக்காமல், தனியாக வைக்கவும்.

பாக்கா பூரி செய்முறை

 வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும் ஏற்கனவே தயாராக பிசைந்து வைத்துள்ள மாவை, தேவையான அளவில் உருண்டையாக உருட்டி கொள்ளவும். உருண்டையை சப்பாத்தி போன்று வட்டமாக தட்டி கொள்ளவும். பின், அதை இரண்டாக மடித்து, முக்கோண வடிவில் செய்து கொள்ளவும். எண்ணெய் சூடானபின், முக்கோண வடிவில் மடித்து வைத்திருந்த மாவை போடவும். தேவை என்றால் வாசனைக்காக ஒரு கிராம்பை குத்தி வைக்கலாம். மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை வறுத்து, எண்ணெயில் இருந்து எடுக்கவும். இதை சர்க்கரை பாகில் போட்டு, ஒரு நிமிடம் ஊற விடவும். ஊறவைத்த பாக்கா பூரிகளின் பாகை வடிகட்டுங்கள். பின், தட்டில் வைத்து பரிமாறலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை