படாபட் மசாலா இட்லி
பொதுவாக இட்லி அனைவருக்கும் பிடித்தமான சிற்றுண்டி. இட்லியில் பல வகைகள் உள்ளன. இவற்றில் மசாலா இட்லியும் ஒன்றாகும். இதை எப்படி செய்வது என, பார்க்கலாமா? இட்லி மிக்ஸ் செய்முறை இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லியை மெல்லியதாக நறுக்கவும். அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பை போட்டு வறுக்கவும். அதன்பின் கடுகு, சீரகம், நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கருவேப்பிலை போடவும். இவை வெந்த பின், கொத்துமல்லி தழையை போடவும். அதன்பின் பாம்பே ரவை, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். இது ஆறிய பின், காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். இதை குளிர்ச்சாதன பெட்டியில் வைத்துக் கொண்டால், மூன்று மாதங்கள் வரை கெட்டுப் போகாது. தேவையான போது படாபட் என, இட்லி தயாரிக்கலாம். ஒரு கிண்ணத்தில் ஒரு கப் மசாலா மிக்ஸ், ஒரு கப் தயிர் சேர்த்து கலக்கவும். இதில் தேவையான அளவு நீர் சேர்த்து, 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். அதன்பின் இதில் தேவைப்பட்டால் சிறிதளவு நீர், சமையல் சோடா சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும். இட்லித் தட்டுகளில் ஊற்றி, அடுப்பில் வைத்து 10 நிமிடங்கள் அதிக தீயிலும், ஐந்து நிமிடங்கள் மிதமான தீயிலும் வேக வைத்தால், சுவையான இட்லிகள் தயார். இந்த மிக்ஸ் தயாரித்து வைத்துக் கொண்டால். அவசர தேவையின்போது, இட்லி தயாரிக்கலாம். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னி பொருத்தமாக இருக்கும் - நமது நிருபர் - .