மருத்துவ குணங்கள் நிறைந்த காரசாரமான கறிவேப்பிலை துவையல்
பொதுவாக கறிவேப்பிலையை யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. தட்டில் உணவு வந்தவுடன், முதலில் வெளியேற்றுவது கறிவேப்பிலையாகவே இருக்கும். இதன் மதிப்பும், மருத்துவ குணங்கள் பற்றி யாருக்குமே தெரிவதில்லை.கறிவேப்பிலையை சுவையான முறையில் துவையலாக செய்து கொடுத்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவர். கறிவேப்பிலை துவையலை சாப்பிடுவதால் முடி பிரச்னை, நோய் எதிர்ப்பு சக்தி, கண் பார்வை, சருமப்பிரச்னை, செரிமான குறைபாடுகள் போன்றவை நீங்கும். செய்முறை
ஒரு வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். இதில், இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து, மிதமான சூட்டில் மூன்று நிமிடங்கள் வதக்கவும்.இதில், நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்த, கறிவேப்பிலையை போட்டு சிறிது நேரம் வதக்கவும். சிறிய துண்டு புளியை போட்டு லேசாக வதக்கி விட்டு, வாணலியை இறக்க வேண்டும்.இந்த கலவை நன்றாக ஆறிய பின், அதை அப்படியே மிக்சியில் போட்டு, சிறிதளவு உப்பு, தண்ணீர் ஊற்றி நன்றாக மையாக அரைக்கவும். இதை அப்படியே ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். அவ்வளவு தான் கறிவேப்பிலை துவையல் தயார். இதை செய்ய 20 நிமிடங்களே போதும்.இந்த மருத்துவ குணமிக்க துவையலை சாம்பார் சாதம், சூடான ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் தொட்டு சாப்பிடும் போது, சுவை அமோகமாக இருக்கும்.குறிப்பாக, தோசையுடன் தொட்டு சாப்பிட்டால் பிரமாதம்... பிரமாதம். இந்த துவையலை காரமாக சாப்பிட விரும்புவோர், அதிகமாக மிளகாய் சேர்த்து கொள்ளலாம். - நமது நிருபர் -