நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அமைக்கப்பட்ட 1,007 நிலத்தடி தொட்டிகள்
- நமது நிருபர் -: கர்நாடகா மாநிலம், பன்ட்வாலை சேர்ந்த மோடன்காபு கார்மல் பள்ளி மாணவர்கள், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, 1,007 நீர்த்தேக்க தொட்டிகளை அமைத்துள்ளனர். தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வால் தாலுகாவில் மோடன்காபு கார்மல் பள்ளி நிர்வாகம், மாணவர்கள் பள்ளி பாடப்புத்தகங்களில் மட்டும் மழைநீர் சேகரிப்பு பற்றி அறிந்தவர்களுக்கு, நேரடியாக செயலில் இறங்கும் வகையில் செயல்பட்டுள்ளது. பசுமை எதிர்கால சுற்றுச்சூழல் சங்கம் என்ற பெயரில் சங்கம் துவங்கி, கடந்த ஏழு ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஏழு ஆண்டுகளில், பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளை சுற்றி, 1,007 நிலத்தடி தொட்டி அமைத்து, மழைநீரை அதில் சேகரித்து, நிலத்தடி நீரை அதிகரித்துள்ளனர். இந்தாண்டு ஜூன் முதல், ஆகஸ்ட் மாதம் வரை மாணவர்களுக்கு, நீர்த்தேக்க தொட்டி கட்டும் போட்டி நடத்தப்பட்டது. இதில், அந்த பள்ளியை சேர்ந்த, 107 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களால் கட்டப்பட்ட ஒவ்வொரு நீர்த்தேக்க தொட்டியும், 3 அடி ஆழம், 2 அடி அகலம், 2 அடி நீளம் கொண்டிருந்தது. மழைநீரால் இந்த தொட்டிகள் நிரம்பும் போது, பூமிக்கு அடியில், 340 லிட்டர் தண்ணீரை தேக்கி வைக்கும். இவ்வாறு 180 நீர்த்தேக்க தொட்டிகளை தோண்டினர். இதன் மூலம், ஒரே நேரத்தில், 61,200 லிட்டர் தண்ணீரை தேக்கி வைக்கலாம். இதனால் கோடை காலத்தில் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டத்தை கணிசமாக அதிகரிக்க உதவும். மாணவர்களை இத்தகைய கடின உழைப்பில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில், அறிவியல் பாடத்திட்டத்தின் கீழ் உள்ள, வடிவமைப்பு மதிப்பீட்டு திட்டப்பணிக்காக, 30 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அத்துடன், இதுபோன்று குழிகள் தோண்டி, நீர்த்தேக்க தொட்டி அமைத்த புகைப்படங்களை அனுப்பும் மாணவர்களுக்கும் பள்ளி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக குழிகள் தோண்டிய மாணவர்களுக்கு 500, 300, 200 ரூபாய் ரொக்க பரிசும், அவர்களின் பெயர் அச்சிடப்பட்ட பேனாக்களும், சிறப்பு பதக்கங்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி வீரா கூறியதாவது: எங்கள் பள்ளியை சேர்ந்த 8, 9, 10ம் வகுப்பை சேர்ந்த, 107 மாணவர்கள், விடுமுறை நாட்களில், 180 நீர்த்தேக்க தொட்டிகளை அமைத்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மழைநீர் சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீர் பெருக்கம் ஆகியவற்றின் மீது இளம் வயதிலேயே குழந்தைகள் காட்டும் இந்த விழிப்புணர்வும், அக்கறையும் சமுதாயத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இவ்வாறு அவர் கூறினார். அறிவியல் ஆசிரியர் ரோஷன் பின்டோ கூறியதாவது: மழையையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் இந்த நீர்த்தேக்க தொட்டிகளை அமைத்து உள்ளனர். 2019ல் துவங்கப்பட்ட இத்திட்டம், கொரோனா காலத்தில் இருந்து தடையின்றி நடந்து வருகிறது. இதுவரை, 1,007 நீர்த்தேக்க தொட்டிகளை அமைத்து உள்ளனர். இதன் நோக்கம், நன்மைகளை விளக்கியும், அவர்களின் அறிவியல் திட்டப்பணிகளுக்காக, 30 மதிப்பெண்கள், சிறப்பு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கிறோம். இது, சமூகத்திலும் நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.