மேலும் செய்திகள்
சீமானுக்கு எத்தனை நாக்குகள்?
14-Oct-2025
டி.ஐ.ஜி. பேர் சொல்லி 'கல்லா' கட்டும் 'கில்லாடி'
04-Nov-2025
மைசூரு மக்களுக்கு நவராத்திரி என்றால் கொலு பொம்மை, தசரா விழா நினைவுக்கு வரும். அத்துடன், 'கெம்பே ஹப்பா' எனும் பொம்மை திருவிழாவும் நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக பலரும் பொம்மை திருவிழாவில் பங்கேற்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய பொம்மைகள், விதவிதமான பொம்மைகள் இடம் பெறும். மைசூரின் விஜயநகரில் வசித்து வரும் கலைஞர் ராகவேந்திரா, 76, கொஞ்சம் வித்தியாசமாக யோசித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய பாரம்பரியத்தை, தனது பொம்மைகள் மூலம் உயிர்ப்பித்து வருகிறார். மைசூரு பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.ஏ., பட்டம் பெற்ற ராகவேந்திரா, பீதர், கலபுரகியில் கர்நாடக அரசு அருங்காட்சியகத்தில் உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பொம்மை திருவிழா இது குறித்து அவர் கூறியதாவது: இக்கலையை என் தாயாரிடம் இருந்து பெற்றேன். பல ஆண்டுகளாக எங்கள் வீட்டில் 'பொம்மை திருவிழா' ஒரு சடங்காகவே இருந்தது. என் தாயார் 2005ல் இறந்த பின்னர், பொம்மைகள் என்ன ஆனது என்று எனக்கு தெரியவில்லை. 2021 ல் கொரோனா காலத்தில் வேலையின்றி வீட்டில் இருந்தேன். என்னை புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்ள விரும்பினேன். அப்போது தான் பொம்மைகளை செய்ய முடிவு செய்தேன். முதலில் களிமண், துணியை பயன்படுத்தி பரிசோதித்தேன். இதன் முடிவுகள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே, காகித கூழில் பொம்மைகள் தயாரிக்க முயற்சித்தபோது, பொம்மைகள் அழகாக வந்தன. என் தாயார், சீனிவாச கல்யாணம் தொடர்பாக அடிக்கடி பாடல் பாடிக் கொண்டே இருப்பார். அதனை கருவாக வைத்து, 2021 ல் 120 பொம்மைகள் செய்து, பார்வைக்கு வைத்தேன். வியாசராஜ மடத்தின் மடாதிபதி, சொந்தே மடத்தில் சுவாமிகள் என பல மடாதிபதிகள், பொம்மைகளை பார்த்து என்னை பாராட்டியது, எனக்கு மேலும் ஊக்கம் அளித்தது. ஸ்ரீராகவேந்திரர் வரலாறு அதற்கு அடுத்தாண்டு, 2022 - 23 ல் ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை காட்சியாக வைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். 'ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மகிமை' என்ற கரு பெயரில், 170 பொம்மைகள் பார்வைக்கு வைத்திருந்தேன். அதை தொடர்ந்து கடந்தாண்டு, 'தசவத்ரதள்ளி பால கிருஷ்ணரில் லீலை' என்ற பெயரில், 210 பொம்மைகள் காட்சிக்கு வைத்திருந்தேன். இந்த படைப்பை பார்க்கும் அனைவரும், என்னை வாழ்த்தியும், பாராட்டியும் வருகின்றனர். கருவாக எதை செய்ய வேண்டும் என்று யோசிப்பேன். கரு கிடைத்தபின், கதையை தயாரிப்பேன். பின் ஒவ்வொரு காட்சிக்கான 'கேரடக்டர்கள்' பிரித்து கொள்வேன். சம்பந்தப்பட்ட காட்சிக்கு பொம்மைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதற்கு ஏற்றபடி வடிவமைத்து கொள்வேன். இதற்கே ஒரு மாதமாகி விடும். அதன் பின், காகித கூழ், பசை, வண்ணம் பூசி தயாரிப்பேன். பழைய நாளிதழ்களில் இருந்து பொம்மைகள் தயாரிப்பதால், 'கழிவுகளில் இருந்து பொக்கிஷம்'ஆக மாறிவிடுகிறது. பொது மக்கள், என் பொம்மைகளை பார்த்த கலைஞர்கள், பொம்மைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நுணுக்கங்களை தெரிவிப்பர். மனைவி உதவி அதுமட்டுமின்றி, இசையில் தங்கப்பதக்கம் பெற்ற என் மனைவி கீதா, இவ்விஷயத்தில் உதவியாக உள்ளார். நான் உருவாக்கும் பொம்மைகளுக்கான ஆடைகள், நகைகள், சிகை அலங்காரத்தை அவர் தான் செய்கிறார். இன்றைய காலகட்டத்தில் 'ஏஐ' எனும் செயற்கை நுண்ணறிவு மூலம் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதுவும் ஒரு வகை கலை தான். ஆனால், உண்மையான கலை, நம் கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும். இக்கலையை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கவும் ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். இவரிடம் இக்கலையை கற்க விரும்புவோர், 98867 64542 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். - நமது நிருபர் -
14-Oct-2025
04-Nov-2025