சான்றிதழ்களுடன் சாதனை புரியும் கணக்கு வாத்தியார்
எதிலாவது ஒன்றில் சாதித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அப்படிப்பட்ட சான்றிதழ்களை வாங்கி, வாங்கி, வீட்டில் வைக்க இடமில்லாமல் போகும் அளவிற்கு ஒரு நபர் இருக்கிறார் என்றால் ஆச்சரியம் தானே. அவர் வேறு யாருமில்லை, கர்நாடகா ஷிவமொக்காவை சேர்ந்த கணக்கு வாத்தியார்.ஷிவமொக்கா, அஜ்ஜம்புரா தாலுகாவை சேர்ந்தவர் கிரிஷ் குந்தே, 40. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர், தன் பள்ளிப்படிப்பை அஜ்ஜம்புரா அரசு பள்ளியில் படித்து முடித்தார். பள்ளிப்படிப்பை முடித்ததும், கல்லுாரியில் சேருவதில் பல சிக்கல்கள் இருந்துள்ளன. முதுகலைப்பட்டம்
அதையெல்லாம் தாண்டி, ஒரு வழியாக குவெம்பு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, கணிதவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். இருந்தாலும் படிப்பின் மீதான ஆர்வம், அவருக்கு குறையவில்லை. மீண்டும் பி.எட்., படிப்பிலும் பட்டம் பெற்றார். தன் வாழ்வில் கற்றுக்கொண்ட பாடத்தை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆசிரியர் பணியில் சேருவதற்காக முயற்சித்து வந்தார்.அப்போது, ஷிவமொக்கா புறநகரில் உள்ள போடார் சர்வதேச பள்ளியில் கணிதம், அறிவியல் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். ஆசிரியர் பணியில் திறம்பட செய்து வைந்தார். மாணவர்களுக்கு போர் அடிக்காத வகையில் பாடம் எடுப்பதில் கைதேர்ந்தவராக விளங்கினார். வினாடி - வினா
ஆனாலும், ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் இருந்தது. அப்போது, இவரது நண்பர் ஒருவர், மத்திய அரசின் 'மை கவர்ன்மென்ட்' செயலி குறித்தும், அச்செயலியில் நடக்கும் வினாடி - வினா போட்டி பற்றியும் விளக்கி உள்ளார்.இதை கேட்டு, ஆர்வமடைந்த கிரிஷ், அச்செயலியை பதிவிறக்கம் செய்து, வினாடி - வினா போட்டியில் பங்கேற்க துவங்கினார். தொடர்ச்சியாக பல வினாடி - வினா போட்டிகளில் பங்குபெற்று, வெற்றி பெற்றார். இதன் மூலம் அச்செயலியில் வழங்கப்படும் 1,280 சான்றிதழ்களை இதுவரை பெற்று உள்ளார்.அதிக சான்றிதழ்களை பெற்ற காரணத்திற்காக இந்தியன் புக் ஆப் ரெக்கார்டிலும், சர்வதேச சாதனையாளர் புத்தகத்திலும் இடம் பிடித்தார். இவர் மேலும் பல விருதுகளை வாங்கி உள்ளார். டாக்டர் அப்துல்கலாம் இந்தியன் ஐகானிக் விருது, சுவாமி விவேகானந்தர் சாதனையாளர் விருது ஆகியவற்றையும் பெற்று உள்ளார். கவுரவ டாக்டர்
இவரது கல்விச்சாதனைகளை பாராட்டி புதுடில்லியில் உள்ள உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் இவருக்கு சமீபத்தில் 'கவுரவ டாக்டர்' பட்டம் வழங்கியது.''இன்றைய தலைமுறையினர் பலரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால், ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும்,'' என்றார் அவர் - நமது நிருபர் -.