இரண்டரை நிமிடத்தில் 195 நாடு பெயரை ஒப்பித்து சிறுவன் சாதனை
வெறும் இரண்டரை நிமிடங்களில், 195 நாடுகளின் பெயர்களை ஒப்பித்த சிறுவன், இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.குறிக்கோளும், அதை ஊக்கப்படுத்த திறமையான குருவும் இருந்தால், எதையும் சாதிக்க முடியும் என்பதை, ஷிவமொக்காவை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவர் நிரூபித்துள்ளார்.ஷிவமொக்கா நகரின் பாபுஜி நகரில் வசிக்கும் நுார் ஆலிம், சபிஹா பானு தம்பதி மகன் சையத் ஆஷாஜ், 10. இவர் ஷிவமொக்கா புறநகரில் உள்ள டில்லி இன்டர்நேஷனல் பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கிறார். இந்த சிறுவனிடம் அசாத்திய திறமை உள்ளது. வெறும் இரண்டரை நிமிடங்களில், ஆங்கில அகர வரிசைப்படி 195 நாடுகளின் பெயர்களை ஒப்பித்து அசத்துகிறார்.அது மட்டுமின்றி, இந்த நாடுகளின் கொடிகளையும் அடையாளம் பார்த்து கூறுகிறார். இவரது பெயர், இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தற்போது உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க, தன்னை தயார்படுத்துகிறார்.சையத் ஆஷாஜ் கூறுகையில், ''இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க, இரண்டு ஆண்டுகளாக தயாரானேன். இதற்கு என் தாய், தந்தை மற்றும் ஆசிரியர்கள் பெரிதும் உதவியாக இருந்தனர். தற்போது உலக வரை படத்தில் உள்ள அனைத்து நாடுகளின் பெயர்களை ஒப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்,'' என்றார்.டில்லி இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் வெங்கடேஷ் கூறியதாவது:தன் சாதனையால், மாணவர் சையத் ஆஷாஜ், இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். வெறும் இரண்டரை நிமிடங்களில் இந்தியா உட்பட 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் கொடிகளை, அடையாளம் காட்டுகிறார். இந்த சாதனையை செய்த மாணவருக்கு, எங்கள் பள்ளி சார்பில் பாராட்டு தெரிவித்துள்ளோம்.வரும் நாட்களில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற, மாணவர் தன்னை தயார் செய்கிறார். பெற்றோர் மட்டுமின்றி, எங்கள் பள்ளியும் அவருக்கு தேவையான ஒத்துழைப்பை அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.