மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக ரத்த தான தினம்
14-Jun-2025
பலரும் பணம், உணவு, ஆடைகளை தானம் கொடுப்பர். ஆனால் தானத்தில் சிறந்த தானம், ரத்த தானம் என்பது ஒரு உயிரை காப்பாற்றும்.பலர் ரத்தம் தானம் செய்ய தயங்குவர். ஆனால், பெலகாவி மாவட்டம் சஹாபூரின் கோரேகள்ளியை சேர்ந்தவர் சிவலிங்கப்பா மஹாதேவப்பா கித்துார், 69, தன் தந்தையின் சொல்லை கேட்டு, இதுவரை 117 முறை ரத்த தானம் செய்துள்ளார்.இதுகுறித்து சிவலிங்கப்பா மஹாதேவப்பா கித்துார் கூறியதாவது:என் தந்தை மஹாதேவப்பா கித்துார், சுதந்திர போராட்ட வீரர். நாட்டுக்காகவும், கோவாவுக்காகவும் போராடி உள்ளார். நான் பி.யு.சி., படித்து கொண்டிருந்தபோது, என்னிடம் என் தந்தை, 'இல்லாதவர்களுக்கு உன்னால் முடிந்த உதவி செய்' என்றார்.அதற்கு நான், 'மாணவனான என்னால் என்ன கொடுக்க முடியும்?' என்று கேட்டேன். அதற்கு தந்தை, 'ரத்த தானம் செய்' என்று கூறினார். அவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, 1979 முதல் 2017 வரை 39 ஆண்டுகளாக, 117 முறை ரத்த தானம் செய்துள்ளேன். ஓராண்டு மட்டும் ஆறு முறையும்; மற்ற ஆண்டுகளில் தலா மூன்று முறையும் ரத்த தானம் செய்துள்ளேன்.மருத்துவ கல்லுாரிகள், லயன்ஸ் சங்கங்கள், மாவட்ட மருத்துவமனைகள், உட்பட பல்வேறு அமைப்புகள் நடத்திய ரத்த தானம் முகாமில் பங்கேற்றுள்ளேன். என்னை நம்பி வருவோரை ஏமாற்றியதில்லை. என் பணியை பார்த்த பல இளைஞர்கள் உற்சாகம் அடைந்து, ரத்த தானம் செய்து முன்வந்துள்ளனர்.டாக்டர்களின் வழிகாட்டுதலின்படி, என்னுடைய 60வது வயதில், 2017ல் உலக ரத்த தான தினத்தில் தானம் செய்தேன். அதன் பின், இதுகுறித்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.எனக்கு 'பி பாசிடிவ்' ரத்தம் உள்ளது. சிலர் ரத்தம் கேட்டு, என் காலில் விழுந்து அழுது கேட்டுள்ளனர். அவர்களுக்கு, ரத்த தானம் செய்யும் போதெல்லாம், வீட்டில் என் மனைவி, பிள்ளைகள் திட்டுவர். எனக்கு அசம்பாவிதம் நேர்ந்தால் என்ன செய்வது என்று கேட்டனர். எனவே, நிபுணரை சந்தித்து கேட்டேன்.அவர் தான், ஆண்டுக்கு 3 முறை தானம் செய்தால் போதும் என்றார். அதை பின் தொடர்ந்தேன். 69 வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு, சைவ உணவுகளையே சாப்பிடுகிறேன். தினமும் ரொட்டி, பச்சை காய்கறிகள், உலர்ந்த பழங்கள், பால். மூன்று முதல் நான்கு கி.மீ., நடைபயிற்சி.தற்போது ரத்தம் கிடைப்பது குறைந்துவிட்டது. எனவே இளைஞர்கள் கெட்ட பழக்கத்தை விட்டு, பெற்றோர், குடும்பத்தின் நலனுக்காகவாவது ரத்த தானம் செய்ய வேண்டும். இல்லையெனில் வருங்காலத்தில் அவசர நேரத்தில் ரத்தம் கிடைக்காமல் அவதிப்பட வேண்டி வரும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
14-Jun-2025