தாயின் நினைவாக அமைத்த இன்ஜினியர்
-- -நமது நிருபர் - - பெங்களூரு ஸ்ரீ ராமபுரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பார்த்தால், பசுமையான கட்டடம் ஒன்று தெரியும். கட்டடத்தின் மொட்டை மாடியில் ஏராளமான பழங்கள், காய்கறிகள், வாழைமரம், கரும்பு பயிரிட்டு உள்ளார், கட்டடத்தின் உரிமையாளரான வெங்கட்ராமன் என்ற வெங்கட். மொட்டை மாடியில் தோட்டம் அமைத்திருப்பது பற்றி வெங்கட் கூறியதாவது: நான் மெக்கானிக்கல் இன்ஜினியர். மும்பை ஐ.ஐ.எம்.,மில் படித்தேன். பல நிறுவனங்களில் வேலை செய்த பின், நானே சொந்தமாக நிறுவனம் துவக்கினேன். எனது அம்மா இயற்கையை அதிகம் நேசித்தவர். எங்களது பழைய வீட்டில் நிறைய செடிகளை வளர்த்தார். அவர் மரணமடைந்த பின் அவரது நினைவாக, எனது அலுவலகத்தின் மொட்டை மாடியில் தோட்டம் அமைத்தேன். நிபுணர் கருத்து மொட்டை மாடியில் தோட்டம் உருவாக்கிய போது, தாவரங்களின் எடையால் மொட்டை மாடி இடிந்து விழும்; தண்ணீர் கசிந்தால் கட்டடத்தில் விரிச ல் ஏற்படும் என்று, பலரும் என்னிடம் கூறினர். இதுகுறித்து பல நிபுணர்களின் கருத்தை நாடினேன். மற்ற நாடுகளில் மொட்டை மாடியில் தோட்டங்கள் வளர்ப்பது பற்றியும் ஆய்வு செய்தேன். மொட்டை மாடியில் தோட்டம் அமைக்கும் வகையில், இடத்தை வடிவமைத்தேன். தற்போது எனது தோட்டத்தில் சப்போட்டா, மாதுளை, மல்பரி, டிராகன், அத்தி, நெல்லிக்காய், எலுமிச்சை உள்ளிட்ட பழங்களும், பாரிஜாதா, மதுனாஷினி, லவஞ்சா, வெற்றிலை உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட செடிகளும் வளர்ந்துள்ளன. தற்போது வனப்பகுதி போல இருக்கும் எனது வீட்டின் மொட்டை மாடியில், தினமும் சிறிது நேரத்தை செலவிடுகிறேன். நானும், எனது ஊழிய ர்களும் மொட்டை மாடியில் அமர்ந்து மனம் விட்டு பேசுகிறோம். 200 லிட்டர் தண்ணீர் மொட்டை மாடியில் வேர்கள் ஊடு ருவி விரிசல் ஏற்படுவதை தடுக்க, 'ரப்பர் பாய்' போடப்பட்டுள்ளது. மழை நீரை சேகரித்து எனது தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு பயன்படுத்துகிறேன். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக, 200 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அனைத்தையும் இயற்கையான முறையிலேயே நான் வடிவமைத்ததால், பராமரிப்பு செலவு இல்லை. இயற்கை உரங்களை பயன்படுத்துகிறேன். பெரும்பாலான மக்கள், மொட்டை மாடிக்கு ஏதாவது பிரச்னை ஏற்படாதா என்று தான் கேட்கின்றனர். எனது முயற்சி மற்றும் பசுமை குறித்து யாரும் ஆர்வமாக கேட்பதில்லை. இது மனதிற்கு வருத்தம் அளிக்கிறது. பணத்தை ஆடம்பரமாக செலவு செய்வதை விட, இயற்கைக்கு செலவு செய்வது மனதிற்கும் உடலு க்கும் நல்லது. சிறிய முயற்சி பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும். தோட்டத்தை நானே நிர்வகித்து வருகிறேன். சுமையாக உணர்ந்ததில்லை. எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.