உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் /  ஓய்வு பெற்ற மெக்கானிக்கல் இன்ஜினியர் வீட்டின் மொட்டை மாடியில் மினி வனம்

 ஓய்வு பெற்ற மெக்கானிக்கல் இன்ஜினியர் வீட்டின் மொட்டை மாடியில் மினி வனம்

- நமது நிருபர் -: பெங்களூரை சேர்ந்த ஒருவர், தனது வீட்டின் 600 சதுர அடி கொண்ட மொட்டை மாடியில் 100க்கும் மேற்பட்ட செடிகளை வளர்த்து, 'மினி வனமாக' மாற்றி உள்ளார். கான்கிரீட் நகரமாகி வரும் பெங்களூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குளிர், மழை காலத்திலும் கூட சில இடங்களில் வெப்பமாக காணப்படுகிறது. இதற்காக சிலர் தங்கள் வீடுகளில், 'ஏசி' வசதிகளை செய்து கொள்கின்றனர். மாடியில் மலை ஆனால் பெங்களூரை சேர்ந்த ஓய்வு பெற்ற மெக்கானிக்கல் இன்ஜினியர் வெங்கட்ராமன், தனது ஐந்து மாடி கொண்ட வீட்டின் மொட்டை மாடியில், 600 சதுர அடியில், மேற்கு தொடர்ச்சி மலையை பெயர்த்து வைத்தது போன்று 100க்கும் மேற்பட்ட செடிகளை வளர்த்து வருகிறார். இயற்கை மீது ஆர்வம் கொண்ட வெங்கட்ராமன், ஓய்வு பெற்ற பின், தனது தாய் நினைவாக வீட்டின் மொட்டை மாடியில் சில செடிகளை வளர்த்து வந்தார். பின், அதையே தன் பொழுதுபோக்காக மாற்றிக் கொண்டார். தற்போது வீட்டின் மொட்டை மாடியில் பழங்கள், காய்கறிகள், மருத்துவ செடிகள், காபி, வென்னிலா, செர்ரி, டிராகன் புரூட், முருங்கை மரம், மிளகு என 100 வகையான செடிகள் வளர்த்து வருகிறார். இந்த மினி வனத்திற்குள் சிறிய விநாயகர் கோவிலும் கட்டி உள்ளார். தினமும் காலையில் விநாயகருக்கு அபிஷேகம் செய்கிறார். அபிஷேகம் செய்யப்படும் நீர் வீணாகாமல் தடுக்க, செடிகளுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார். இது குறித்து வெங்கட்ராமன் கூறியதாவது: ஒரு காட்டின் வலிமை, பூமிக்கு அடியில் உள்ளது. வேர்கள், ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. அவை ஒன்றுக்கொன்று ஆதரவாக நிலைத்து நிற்கும் தன்மையை உருவாக்குகின்றன. புயலின் போது எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. முருங்கை மரம் உதாரணமாக, முருங்கை மரத்தை எடுத்து கொண்டால், அதன் வேர்கள் அருகிலுள்ள தாவரங்களை சுற்றி பின்னி ஒன்றிணைந்திருக்கும். பலத்த காற்றை எதிர்த்து தனியாக நிற்பதற்கு பதிலாக, அந்த தாவரங்கள் ஒன்றோடு ஒன்று நிலை நிறுத்தி கொள்கின்றன. இங்கு விளையும் காபி செடிகள், 2 கிலோ வரை உற்பத்தி செய்கின்றன. காய்கறிகளுடன் மருத்துவ தாவரங்களும் வளர்க்கப்படுகின்றன. மழை காலத்தில் 80 சதவீதம் நீரை சேகரித்து வடிகட்டி, மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வனம் மூலம் மூன்று முதல் நான்கு டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தை குறைத்து, வீட்டில் இருப்பவர்களுக்கு குளிர்ச்சி தருகிறது. காற்றின் தரம் 10 முதல் 12 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !