உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / கால்நடை வளர்ப்பில் வி வேகம் காட்டும் பிரவீன் ஷெராவத்

கால்நடை வளர்ப்பில் வி வேகம் காட்டும் பிரவீன் ஷெராவத்

தன் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். அதற்கு மேல் படிக்க விரும்பவில்லை; படிப்பும் தலைக்கு ஏறவில்லை.தன் நண்பர்களுடன் சேர்ந்து ஊரை சுற்றுவது, சினிமா பார்ப்பது என பொழுதை கழித்தார். அந்த சமயத்தில், நேரம் கிடைக்கும்போது, விவசாயம் செய்து வந்தார்.இப்படியே, தன் இளமைப்பருவத்தில் நாட்களை கழித்தார். அவருக்கு, 20 வயதானபோது எந்த வேலைக்கு செல்வது என யோசித்தார். அச்சமயத்தில், தெரியாத வேலைக்கு செல்வதை விட, தெரிந்த விவசாயத்தை செய்யலாமே என விளையாட்டாய் ஆரம்பித்தார்.

எட்டு ஏக்கர் நிலம்

இதற்கு அவரது வீட்டில் முழு ஒத்துழைப்பு கிடைத்தது. இதை பயன்படுத்திக் கொண்ட அவரும், 8 ஏக்கர் நிலத்தில், பல வகை தானியங்கள், கொய்யா, பலா, 4 ஏக்கரில் மூங்கில் என ஒரே நேரத்தில் பல வகைகளை பயிரிட்டார்.இதை பார்த்த, சிலர் நாலு விதமாக பேசினர். இதையெல்லாம் கண்டு கொள்ளாத ஷெராவத், தன் மீது விழுந்த துாசி போல, தட்டிவிட்டுச் சென்றார்.இந்த பயிர்களை அறுவடை செய்ததில், அவருக்கு பெரிய லாபமோ, நஷ்டமோ ஏற்படவில்லை. இதனால், அவர் கால்நடை தொழிலில் கால்பதிக்க முயற்சித்தார். ஆடு, ஜெர்சி மாடு என இரண்டையும் வளர்த்தார்.அப்போது, ஆடுகளை விற்பதால் கிடைக்கும் லாபத்தின் மீது இவரது கவனம் செல்லவே, மேலும் பல ஆடுகளை வாங்க துவங்கினார். இப்படி படிப்படியாக ஆரம்பித்து, தற்போது, ஒரு பெரிய கொட்டகை அமைத்து, அதில் 200க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.

40 லிட்டர் பால்

இந்த ஆடுகளுடன் சேர்ந்து 6 ஜெர்சி பசுக்களும் உள்ளன. இந்த மாடுகள் ஒரு நாளைக்கு 40 லிட்டர் பால் தருகின்றன. இதை, விற்பனை செய்து, மாதம் 30,000 ரூபாய் சம்பாதித்து வருகிறார்.வார சந்தையில், ஒரு ஆண்டுக்கு 100 முதல் 150 ஆடுகளை விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் ஆண்டுக்கு 7.50 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்.ஆட்டின் புழுக்கைக்கு விஜயபுரா, உத்தர கன்னடா மாவட்டங்களில் தேவை அதிகமாக உள்ளது. எனவே, ஒரு டிராக்டர் 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். மேலும், குங்குமப்பூ, கடலை எண்ணெய், மிளகாய் துாள் ஆகியவற்றையும் விற்கிறார்.இவருக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், வேளாண் துறை அதிகாரிகளிடம் சென்று ஆலோசனை பெறும் வழக்கத்தை வைத்துள்ளார். இதுவும், இவரது வெற்றிக்கு காரணம் என சொல்லலாம். இப்படி பல வேலைகளை செய்த ஷெராவத், இயல்பிலேயே அதிகம் பேசாத குணமுடையவர், இருப்பினும் அவர் கூறிய ஓரிரு வார்த்தைகள்: விவசாயம் செய்யும் போதே, வேறு தொழிலும் செய்யுங்கள். கடினமாக உழைத்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும். இப்படி இரண்டே வரியில், தன் 40 ஆண்டு கால வாழ்க்கையில் கற்ற பாடத்தை கூறி ஆச்சரியப்படுத்தி உள்ளார், இந்த பிரவீன் ஷெராவத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ