உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் /  கல்லுாரி மாணவர்கள் தயாரித்த ரோபோ

 கல்லுாரி மாணவர்கள் தயாரித்த ரோபோ

- நமது நிருபர் - ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக் தொழில்நுட்பத்தில், மங்களூரின் கல்லுாரி மாணவர்கள், இயந்திர மனிதனை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின், முக்கதாவில் சீனிவாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு படிக்கும் மூன்று மாணவர்கள், இயந்திர மனிதன் எனும் ரோபோவை தயாரித்துள்ளனர். ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'ஸ்ரீனிபோட்' என, பெயர் சூட்டியுள்ளனர். பல்கலைக்கழகத்துக்கு வரும் பொதுமக்களை வரவேற்பதுடன், மனித வரவேற்பாளரை விட, வேகமாகவும், தெளிவாகவும், தேவையான தகவல்களை தெரிவிக்கும் திறன் கொண்டது இந்த ரோபோ. ஐந்து அடி உயரம் உள்ள, ஸ்ரீனிபோட்டை ஐந்து லட்சம் ரூபாய் செலவில், ஒரே மாதத்தில் மாணவர்கள் தயாரித்துள்ளனர். இதற்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுள்ளது. ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உதவியால், தனக்கு முன் வரும் நபரின் முகத்தை, உடனடியாக அடையாளம் கண்டு, ' வெல்கம் டு ஸ்ரீனிவாஸ் யூனிவர்சிட்டி' என, கவுரவமாக வரவேற்கும் இந்த ரோபோவுடன் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் பேசவும் முடியும். பல்கலைக்கழகத்தில் உள்ள கோர்ஸ்கள், கட்டணம், ஹாஸ்டல் வசதி உட்பட, என்ன கேள்விகள் கேட்டாலும், தெளிவான தகவல்களை தெரிவிக்கும இந்த ரோபோவுக்கு, ஒரு முறை சார்ஜ் செய்தால், எட்டு முதல் 10 மணி நேரம் செயல்படும், லிதியம் பேட்டரி சிஸ்டம் இந்த ரோபோவில் உள்ளது. பல்கலைக்கழகம் மட்டுமின்றி, பள்ளி, கல்லுாரிகள், பெரிய மருத்துவமனைகள், ஹோட்டல்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்தலாம். அந்தந்த நிறுவனங்களின் தேவைக்கு தகுந்தார் போன்று, மென்பொருளை மாற்றி, பயன்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !