உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / வனப்பகுதியை பாதுகாக்க போராடும் ஆர்.டி.ஐ., ஆர்வலர்

வனப்பகுதியை பாதுகாக்க போராடும் ஆர்.டி.ஐ., ஆர்வலர்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் துவங்கி கோவா, கர்நாடகா, கேரளா வழியாக 1,600 கி.மீ., துாரம் நீண்டு, தமிழகத்தின் கன்னியாகுமரியில் மேற்கு தொடர்ச்சி மலை முடிவடைகிறது.இந்த மலைத் தொடர், கர்நாடகாவில் சாயத்ரி மலைத்தொடர் என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் பெலகாவி, உத்தர கன்னடா, சிக்கமகளூரு, குடகு, உடுப்பி, சாம்ராஜ்நகர், தட்சிண கன்னடா, மைசூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளன.கர்நாடகாவில் சில இடங்களில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றை தடுக்கும் முயற்சியில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஒருவரை பற்றி பார்க்கலாம்.பெலகாவி டவுனை சேர்ந்தவர் கிரிதர் குல்கர்னி, 34. தனியார் நிறுவன ஊழியர். ஆர்.டி.ஐ., எனும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலராகவும் உள்ளார். பசுமை மீது கொண்ட காதலால், வன அதிகாரியாக வேண்டும் என்று நினைத்தார். சில காரணங்களால் அவரது ஆசை நிறைவேறவில்லை. ஆனாலும் வனத்திற்கும், வனவிலங்குகளுக்கும் தங்கள் முடிந்த பங்களிப்பு அளிக்க வேண்டும் என்று நினைத்தார்.வனப்பகுதியை ஆக்கிரமித்து ஏதாவது கட்டடம் கட்டப்பட்டு இருந்தால் அதுகுறித்து ஆய்வு செய்து, வனத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார். இதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெறுகிறார்.இதனால் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்தும் அவருக்கு மிரட்டல் வருகிறதாம். ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் வனத்தை பாதுகாக்கும், ஒரே குறிக்கோளுடன் உள்ளார்.அரசு சார்பில் நடத்தும் வனத்துறை தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, வனத்தை பாதுகாக்க தனக்குள் இருக்கும் ஆலோசனைகளை கூறி வருகிறார்.காவிரி, துங்கபத்ரா, மல்லபிரபா, கட்டபிரபா ஆறுகளின் பிறப்பிடம் மேற்கு தொடர்ச்சி மலை தான். இங்கு கட்டடங்கள் வந்தால் குடிதண்ணீருக்கு பிரச்னை ஏற்படும். வனவிலங்குகள் கடுமையாக பாதிக்கப்படும். காடுகளை அழித்து வருவதால் பருவநிலை மாறி வருகிறது. இனிமேலாவது காடுகளை வளர்க்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று, கிரிதர் குல்கர்னி கூறுகிறார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை